தமிழக தேர்தல் 2026: 85% வாக்குப்பதிவு சாதனை… ஆனால் 5 அமைச்சர்களுக்கு காத்திருக்கும் ‘செக்’… அதிர வைக்கும் ரிப்போர்ட்…!

By Nanthini on சித்திரை 25, 2026

Spread the love

தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல், ஜனநாயகத் திருவிழாவாக எழுச்சியுடன் நடைபெற்று முடிந்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலில் 73.63 சதவீதமாக இருந்த ஒட்டுமொத்த வாக்குப்பதிவு, இந்த முறை கணிசமாக உயர்ந்து 85.15 சதவீதத்தை எட்டியுள்ளது. இந்த அதிரடி உயர்வுக்குத் தேர்தல் ஆணையத்தின் ‘சார்’ (SSR) எனும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த நடவடிக்கைகள் முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. அதேவேளையில், நடிகர் விஜய்யின் அரசியல் வருகையும், மாற்றத்தை விரும்பி வாக்களித்த புதிய வாக்காளர்களின் பங்களிப்பும் இந்த வாக்கு சதவீத உயர்வுக்குப் பலம் சேர்த்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

மாநில அளவில் வாக்குப்பதிவு அதிகரித்திருந்தாலும், ஆளுங்கட்சி அமைச்சர்கள் களம் கண்ட 5 முக்கிய தொகுதிகள் உட்பட மொத்தம் 12 தொகுதிகளில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை கடந்த முறையை விடக் குறைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் குறிப்பாகச் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த 8 தொகுதிகள் மற்றும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 2 தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. திண்டுக்கல் மற்றும் திருவாரூர் மாவட்டங்களிலும் தலா ஒரு தொகுதியில் வாக்குப்பதிவு சரிவைச் சந்தித்துள்ளது. ஒட்டுமொத்த எழுச்சிக்கு மத்தியில், இந்த குறிப்பிட்ட தொகுதிகளில் நிலவும் தேக்கநிலை தேர்தல் ஆணையத்தின் தரவுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

   

அமைச்சர்கள் போட்டியிட்ட தொகுதிகளைப் பொறுத்தவரை, துறைமுகம் தொகுதியில் அமைச்சர் பி.கே. சேகர்பாபு மற்றும் சைதாப்பேட்டையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோர் மீண்டும் களமிறங்கிய நிலையில், அங்கு வாக்குகள் குறைந்துள்ளன. இதே நிலைதான் ஒட்டன்சத்திரத்தில் போட்டியிட்ட அமைச்சர் சக்கரபாணி, மன்னார்குடியில் டி.ஆர்.பி. ராஜா மற்றும் மதுரை மத்தியில் போட்டியிட்ட பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆகியோரின் தொகுதிகளிலும் நீடிக்கிறது. நூற்றுக்கணக்கான வாக்குகள் முதல் சில ஆயிரங்கள் வரை இந்தத் தொகுதிகளில் வாக்குப்பதிவு சரிந்திருப்பது, ஆளுங்கட்சியினரிடையே ஒருவிதமான கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

   

அமைச்சர்கள் மட்டுமின்றி முக்கிய விஐபி-க்கள் போட்டியிட்ட தொகுதிகளும் இந்தச் சரிவில் இருந்து தப்பவில்லை. தவெக-வின் ஆதவ் அர்ஜுனா போட்டியிட்ட வில்லிவாக்கம், பா.ஜ.க-வின் தமிழிசை சவுந்தராஜன் போட்டியிட்ட மயிலாப்பூர் மற்றும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வளர்மதி போட்டியிட்ட ஆயிரம் விளக்கு ஆகிய தொகுதிகளிலும் கடந்த தேர்தலை விடக் குறைந்த எண்ணிக்கையிலான வாக்குகளே பதிவாகியுள்ளன. குறிப்பாக ஆர்.கே. நகர் மற்றும் மதுரை தெற்கு தொகுதிகளில் தலா 6,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் சரிந்துள்ளன. மாநிலம் முழுவதும் வாக்குப்பதிவு சதவீதம் உயர்ந்தும், இந்த முக்கிய தொகுதிகளில் ஏற்பட்ட சரிவு தேர்தல் முடிவுகளில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.