அட கடவுளே… விளையாடப் போன புள்ள பிணமாகிட்டானே… வாஸ்து தூண் சரிந்து விழுந்து… 4-ஆம் வகுப்பு மாணவன் கொடூரமாக பலி… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!

By Swetha on ஆவணி 19, 2026

Spread the love

கர்நாடக மாநிலம் சிக்நாயகனஹள்ளி தாலுகாவில் உள்ள பெலகிஹள்ளி கிராமத்தில், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கக் கட்டிடத்தின் சிமெண்ட் தூண் இடிந்து விழுந்ததில் தனுஷ் என்ற 10 வயது பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான். அரசு உயர் தொடக்கப்பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்த தனுஷ், தனது சக மாணவர்களுடன் கட்டிடத்தின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக தூண் உடைந்து அவனது தலையில் விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

சம்பவ இடத்திலிருந்த பிற குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில், இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அக்கட்டிடத்தின் முன் பகுதியில் மூன்று தூண்கள் இருந்த நிலையில், வாஸ்து நிபுணரின் ஆலோசனையின் பேரில் முறையான அடித்தளம் மற்றும் இரும்பு கம்பிகள் இன்றி கூடுதல் தூண் ஒன்று புதிதாகக் கட்டப்பட்டதே இடிபாட்டிற்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து வட்டாட்சியர் மற்றும் கல்வித்துறை அளித்த புகாரின் பேரில் சிக்நாயகனஹள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

   

https://twitter.com/HateDetectors/status/2089998302708162967/video/2

   

இச்சம்பவத்தைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜே.சி.மதுசாமி, வட்டாட்சியர் மமதா, காவல் கண்காணிப்பாளர் அசோக் கே.வி மற்றும் குழந்தைகள் உரிமை ஆணைய இயக்குனர் சத்தியநாராயணா ஷெட்டி உள்ளிட்ட பலர் விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டனர். உயிரிழந்த தனுஷின் பெற்றோர் ஆனந்தமூர்த்தி – நிமிதா குடும்பத்தினருக்கு தும்கூர் பால் ஒன்றியம் சார்பில் நிவாரணத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டுமானக் கோளாறு அல்லது பராமரிப்புக்குறைபாடு ஆகியவை குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.