மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஈரான் மீது “நரகத்தை இறக்குவேன்” என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள 48 மணி நேர காலக்கெடு சர்வதேச சமூகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த மார்ச் 26 அன்று, ஈரான் ஒரு புதிய ஒப்பந்தத்திற்கு உடன்பட வேண்டும் அல்லது ஹார்மஸ் நீர்வழிப்பாதையை உலக நாடுகளின் பயன்பாட்டிற்குத் திறந்துவிட வேண்டும் என 10 நாள் அவகாசத்தை ட்ரம்ப் வழங்கியிருந்தார். அந்த அவகாசம் நாளை ஏப்ரல் 6-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், “நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது” என எச்சரித்துள்ள ட்ரம்ப், ஈரான் பணிய மறுத்தால் அந்நாட்டின் மின்சார உட்கட்டமைப்புகள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், ட்ரம்ப் முன்வைக்கும் ஒப்பந்தம் ஒருதலைபட்சமாக இருப்பதாகவும், அதனை ஏற்க வாய்ப்பே இல்லை என்றும் ஈரான் திட்டவட்டமாக மறுத்து வருகிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்களுக்குப் பிறகு பாதுகாப்பிற்கான முழு உத்தரவாதத்தையும், ஏற்பட்ட சேதங்களுக்கான இழப்பீட்டையும் வழங்கினால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு இடம் உண்டு என ஈரான் பிடிவாதமாக உள்ளது. ஒருவேளை பொதுமக்கள் பயன்படுத்தும் மின்சார நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், அது சர்வதேச சட்டங்களின்படி போர்க்குற்றமாக கருதப்படும் என அரசியல் வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர்.
இந்த மோதலின் ஒரு பகுதியாக, உலகின் மிக முக்கியமான ஹார்மஸ் நீர்வழிப்பாதையை ஈரான் மூடியுள்ளதால் கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பதிலடியாக ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் காலிபாஃப், மற்றொரு முக்கிய வழித்தடமான ‘பாப் எல்-மண்டேப்’ (Bab el-Mandeb) குறித்து மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார். சூயஸ் கால்வாய்க்குச் செல்லும் உலகளாவிய கொள்கலன் கப்பல் போக்குவரத்தில் கால் பங்கு இந்த வழித்தடம் வழியாகவே நடைபெறுகிறது. ஈரான் ஆதரவு ஹவுதி அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள இப்பகுதியை முடக்கினால், உலகளாவிய உணவு மற்றும் எரிசக்தி விநியோகச் சங்கிலி முற்றிலுமாக சீர்குலையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தற்போது நிலவும் இந்த இழுபறி நிலையால் கச்சா எண்ணெய் விலை உலக சந்தையில் ராக்கெட் வேகத்தில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 48 மணி நேரக் காலக்கெடு முடிவதற்குள் ஏதேனும் இராஜதந்திர உடன்பாடு ஏற்படுமா அல்லது மத்திய கிழக்கு ஒரு முழு அளவிலான போரைச் சந்திக்குமா என்பது உலக நாடுகளின் மிகப்பெரிய கவலையாக உள்ளது. அமெரிக்காவின் அடுத்தகட்ட நகர்வும், ஈரானின் பதிலடியும் வரும் நாட்களில் உலகப் பொருளாதாரத்தின் திசையைத் தீர்மானிக்கும் காரணியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
