உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி, ஹாத்ரஸ் மாவட்டத்தில் சாலையோரத்தில் ஜோஷினா (60) என்ற பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து விசாரிக்கப் போலீசார் 5 மாவட்டங்களில் உள்ள சுமார் 1,000 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, கொலையாளி இம்ரான் (45) என்பவரைக் கைது செய்தனர்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஜோஷினாவின் மகள் திருமணத்திற்கு இம்ரான் உதவியதன் மூலம் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியுள்ளது. நவம்பர் 10ஆம் தேதி ஜோஷினா, இம்ரானைச் சந்தித்துத் தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால், ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ளதால் இம்ரான் மறுத்துள்ளார்.
திருமணத்திற்கு வற்புறுத்தியதால் ஆத்திரமடைந்த இம்ரான், நவம்பர் 13ஆம் தேதி ஜோஷினாவைக் கொல்கத்தாவுக்குத் திரும்ப அனுப்பி வைப்பதாகக் கூறி அழைத்துச் சென்றுள்ளார். ஹாத்ரஸ் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் ஜோஷினாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். மேலும், அது பாலியல் வன்புணர்வு கொலை போலக் காட்ட, ஆடைகளைக் கலைத்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார். ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட இம்ரான், குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
