கேரள மாநிலத்தில் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த ‘பள்ளாட்டு பிரம்மதத்தன்’ என்ற 45 வயதான வளர்ப்பு ஆண் யானை, எதிர்பாராதவிதமாக இடி தாக்கி உயிரிழந்த சம்பவம் விலங்கு ஆர்வலர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் சோகத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. யானை கட்டப்பட்டிருந்த இடத்தில் வீசிய பலத்த மழை மற்றும் மின்னல் தாக்குதலால் அது சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, “இடி மின்னல் என்பது இயற்கையானது; ஆனால், யானையைச் சங்கிலியால் பிணைத்து வைத்திருந்த அடிமைத்தனம் மனிதனால் உருவாக்கப்பட்டது” என்றும், “சுதந்திரமாக வாழ வேண்டிய விலங்குகளைக் கலாச்சாரம் என்ற பெயரில் சிறைப்பிடிப்பதை நிறுத்த வேண்டும்” என்றும் விலங்கு நல ஆர்வலர்கள் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கோவில்கள் மற்றும் திருவிழாக்களில் யானைகளைப் பயன்படுத்துவது தொடர்பான பாதுகாப்பு விதிகளை மேலும் கடுமையாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
