தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஆளும் திமுக மற்றும் அதன் முக்கிய கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பாக கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. குறிப்பாக, வரும் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 40 இடங்களைக் கோருவதாகவும், வெறும் வேட்பாளர்களாக மட்டும் இல்லாமல் ஆட்சியிலும் பங்கு வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. காங்கிரஸின் இந்தத் திடீர் ‘டிமாண்ட்’ திமுக தலைமைக்கு கடும் அதிர்ச்சியையும், சங்கடத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கூட்டணி விரிசலுக்கு மற்றுமொரு முக்கிய காரணமாக அமைந்தது திமுக மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு இடையே பொதுவெளியில் வெடித்த நேரடி மோதலாகும். மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக எம்.எல்.ஏ கோ. தளபதி, மாணிக்கம் தாகூர் மற்றும் ஜோதிமணி போன்ற காங்கிரஸ் தலைவர்கள் திமுகவின் உழைப்பால்தான் வெற்றி பெறுகிறார்கள் என்றும், அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கக் கூடாது என்றும் பேசியது சர்ச்சையை கிளப்பியது. இதற்குப் பதிலடியாக, கோ. தளபதி போட்டியிடும் தொகுதியிலேயே காங்கிரஸ் போட்டியிட உரிமை கோருவோம் என மாணிக்கம் தாகூர் சவால் விடுத்தது கூட்டணியில் பெரும் சலசலப்பை உருவாக்கியுள்ளது.
திமுகவின் இழுபறி நிலையால் அதிருப்தியில் உள்ள தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள், தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச திமுக இதுவரை அழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டையும் முன்வைக்கின்றனர். தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், “திமுகவின் பதிலுக்காக இரண்டு மாதங்களாகக் காத்திருக்கிறோம்” எனக் கூறி பந்தை திமுக பக்கம் திருப்பியுள்ளார். தங்களை அவமதிப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும், முதலமைச்சர் ஸ்டாலின் மீதான மரியாதையாலும் கூட்டணி தர்மத்தாலும் மட்டுமே தாங்கள் பொறுமை காப்பதாகவும் ஜோதிமணி போன்ற தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.
இத்தகைய பதற்றமான அரசியல் சூழலில்தான், ராகுல் காந்தி விரைவில் தமிழகம் வர உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட உள்ள கிராம கமிட்டி நிர்வாகிகள் மாநாட்டில் பங்கேற்க வரும் அவர், இந்தச் சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ராகுல் காந்தியின் வருகை, திமுகவின் பிடிவாதத்தைக் குறைத்து கூட்டணியை உறுதிப்படுத்துமா அல்லது காங்கிரஸின் தனித்து நிற்கும் முடிவுக்கு வித்திடுமா என்பதுதான் தற்போதைய தமிழக அரசியலின் எதிர்பார்ப்பாக உள்ளது.
