உத்திரபிரதேசம் கான்பூர் மதையாபூர்வா நியூ காலனியைச் சேர்ந்த ஆஷு ராஜ்புத் என்பவர் தட்டு தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரிகிறார். இவருடைய மனைவி மோகினிக்கு உடல்நிலை சரியில்லாமல் வாந்தி எடுத்ததால் ஒரு மருத்துவக் கடையில் இருந்து மருந்து மற்றும் எலக்ட்ரோலைட்டை வாங்கினார். முதலில் எலக்ட்ரோலைட்டை ஒரு பாட்டிலில் கரைத்து, மனைவிக்கு ஒரு கிளாஸ் எலக்ட்ரோலைட்டைக் கொடுத்து, பின்னர் அதை அவரும் குடித்தார். பின்னர் அதே எலக்ட்ரோலைட் கரைசலை தனது மகன் கிருஷ்ணா ராஜ்புத்துக்கு (4) கொடுத்தார். கரைசலைக் குடித்த பிறகு, ஆஷு வேளைக்கு கிளம்பியுள்ளார்.
சிறிது நேரத்திலேயே, ஆஷுவைத் தவிர மற்ற அனைவருக்கும் உடல்நிலை சரியில்லாமல் போனது. அவர்கள் அதிக அளவில் வாந்தி எடுக்கத் தொடங்கினர், மேலும் அவர்களின் நிலை மோசமடைந்தது. அவரது மனைவி உடனடியாக ஆஷுவுக்குத் தகவல் கொடுத்தார். ஆஷு உடனடியாக வீடு திரும்பி அனைவரையும் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். ஆனால் மருத்துவமனையில், கிருஷ்ணா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர் .
அவரது மனைவி மோகினி மற்றும் மருமகன் ககன் ஆகியோர் இன்னும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் கிடைத்ததும், காகதேவ் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இந்த விஷயத்தை விசாரிக்கத் தொடங்கினர். இந்நிலையில் மூத்த குழந்தை மருத்துவர் டாக்டர் ராஜன் காந்தி, எலக்ட்ரோலைட்டுகளை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும், நீரிழப்பு ஒரு பிரச்சனையாக இருந்தால் மட்டுமே எலக்ட்ரோலைட்டுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மருத்துவரை அணுகாமல் எலக்ட்ரோலைட்டுகளை எடுத்துக்கொள்வது தீங்கு விளைவிக்கும் என்று கூறியுள்ளார்.
