“லஞ்சம் வாங்கினது வெறும் 30 ஆயிரம்… ஆனா வீட்ல இருந்தது 4 கோடி”…. பீரோவை திறந்த அதிகாரிகள் அதிர்ச்சி…. ஒடிசாவில் நடந்த சினிமா பாணி ரெய்டு….!

By Nanthini on மாசி 26, 2026

Spread the love

ஒடிசா மாநிலத்தில் வெறும் 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி ஒருவரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், கணக்கில் வராத சுமார் 4 கோடி ரூபாய் ரொக்கப் பணம் பிடிபட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய இந்தத் திடீர் சோதனையில், மலைபோல் குவிந்து கிடந்த பணத்தைக் கண்டு அதிகாரிகளே அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

ஒடிசா மாநிலத்தின் நபாரங்பூர் மாவட்டத்தில் உள்ள கூடுதல் துணை ஆட்சியர் பிரசாந்த் குமார் ராவத் என்பவரே இந்த ஊழல் புகாரில் சிக்கியுள்ளார். ஒரு ஒப்பந்ததாரரிடம் பணிக்கான அனுமதியை வழங்க 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டபோது, அவர் லஞ்ச ஒழிப்புப் துறையினரிடம் கையும் மெய்யுமாகப் பிடிபட்டார். இதனைத் தொடர்ந்து அவருக்குச் சொந்தமான பல இடங்களில் அதிகாரிகள் தீவிர சோதனையை மேற்கொண்டனர்.

   

புவனேஸ்வர் மற்றும் நபாரங்பூர் உள்ளிட்ட 9 இடங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட இந்தச் சோதனையில், கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. குறிப்பாக, அவரது வீட்டில் இருந்து 3 கோடி ரூபாய்க்கும் அதிகமான ரொக்கப் பணம் கண்டெடுக்கப்பட்டது. இந்தப் பணத்தை எண்ணுவதற்கு லஞ்ச ஒழிப்புத் துறையினர் பல இயந்திரங்களைப் பயன்படுத்த வேண்டியிருந்தது. ரொக்கம் மட்டுமின்றி பல கோடி ரூபாய் மதிப்புள்ள நில ஆவணங்களும் சிக்கியுள்ளதாகத் தெரிகிறது.

   

அரசுப் பணியில் இருந்து கொண்டு இவ்வளவு பெரிய தொகையை அவர் எவ்வாறு சேர்த்தார் என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. சாதாரண லஞ்சப் புகாரில் தொடங்கி, தற்போது கோடிக்கணக்கிலான முறைகேடு வெளிச்சத்திற்கு வந்திருப்பது அரசு வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைதான அதிகாரி மீது பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.