தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் ஊத்தங்கரை சட்டப்பேரவை உறுப்பினர் இளையராஜாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட வழக்கின் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) தற்போது வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்பேரவையில் ஆளுங்கட்சிக்கு எதிராக செயல்படக் கோரி, அவருக்கு ரூ.35 கோடி பேரம் பேசப்பட்டதும், அதற்கு அவர் மறுத்ததால் குடும்பத்தோடு கொலை செய்துவிடுவோம் என மிரட்டல் விடுக்கப்பட்டதும் இந்த எப்.ஐ.ஆர் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சென்னை காவல் ஆணையரிடம் எம்எல்ஏ இளையராஜா அளித்த புகாரின் பேரில், திருவல்லிக்கேணி போலீஸார் இந்த வழக்கைப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வெளியாகியுள்ள எப்.ஐ.ஆர் தகவல்களின்படி, அரும்பாக்கத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் சென்னை நகரில் “ஐபிடிஎஸ்” (IPDS) என்ற கருத்துக்கணிப்பு நிறுவனம் நடத்தி வருவதாகக் கூறி, இளையராஜாவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். ஒரு முக்கிய அரசியல் கட்சியின் பின்னணியில் பேசுவதாகக் குறிப்பிட்ட அவர், சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராகக் கொண்டு வரப்படும் தீர்மானத்தின் போது தங்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டால் ரூ.35 கோடி தருவதாக ஆசை காட்டியுள்ளார். ஆனால், இந்த பிரம்மாண்ட பேரத்தை ஏற்க மறுத்த எம்எல்ஏ இளையராஜா, தமக்கு இதில் விருப்பமில்லை என்றும், இனிமேல் இதுகுறித்து பேச வேண்டாம் என்றும் திட்டவட்டமாகக் கூறி மறுத்துள்ளார்.
எனினும், இத்துடன் விடாமல் மீண்டும் தொடர்பு கொண்ட திருநாவுக்கரசு, “நீங்கள் கஷ்டப்பட்டு இந்த நிலைக்கு வந்திருக்கிறீர்கள், ரூ.35 கோடி என்பது நினைத்துக்கூட பார்க்க முடியாத தொகை” என்று கூறி சம்மதிக்க வைக்க முயன்றுள்ளார். அத்தோடு நில்லாமல், “நாங்கள் சொல்வது போல் நடந்தால் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் நல்லது; இல்லையென்றால் கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என்று மிரட்டியுள்ளார். மேலும், இந்த பேரம் குறித்து வெளியில் சொன்னால் இளையராஜாவையும் அவரது குடும்பத்தினரையும் உயிருடன் வைக்க மாட்டோம் எனத் தொடர் கொலை மிரட்டல்களையும் விடுத்துள்ளார்.
இந்த பகீர் புகாரின் அடிப்படையில் களமிறங்கிய சென்னை திருவல்லிக்கேணி போலீஸார், முதற்கட்டமாக அரும்பாக்கத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு, நரேஷ், தியாகராஜன் ஆகியோரைக் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து கரூரிலும் கார்த்திக் உள்ளிட்ட மேலும் இருவரைப் பிடித்து சென்னைக்கு அழைத்து வந்து தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது கைது செய்யப்பட்டுள்ள முக்கியக் குற்றவாளிகள் மூன்று பேரை வரும் 15-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இவர்களிடம் நடத்தப்படும் அடுத்தகட்ட விசாரணையின் மூலம் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என போலீஸ் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது திருநாவுக்கரசு, நரேஷ், கிருஷ்ணன், அசோக்குமார் உள்ளிட்டோர் மீது ஊழல் தடுப்புச் சட்டம், கூட்டுச்சதி, கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்படலாம் என்று கூறப்படும் சூழலில், செந்தில் பாலாஜி தலைமறைவாகியுள்ளதாக வெளியாகும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன. இந்த ரூ.35 கோடி பேரத்தின் பின்னணியில் இருக்கும் முக்கிய அரசியல் புள்ளிகள் யார், யார் சார்பில் இந்த சதித்திட்டம் தீட்டப்பட்டது என்பது போன்ற பல கோணங்களில் போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
