உத்தரப் பிரதேச மாநிலம் சந்தௌலியில் 26 மணி நேர இடைவெளியில் மூன்று பேரைச் சுட்டுக் கொன்ற பஞ்சாப்பைச் சேர்ந்த ‘சைக்கோ’ கொலைகாரன் குர்பிரீத் சிங், போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். ஓய்வுபெற்ற ராணுவ வீரரான இவர், கடந்த சில நாட்களாக ரயிலிலும் தனியார் மருத்துவமனையிலும் அடுத்தடுத்து மூன்று கொலைகளைச் செய்து அப்பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தியிருந்தார்.
குர்பிரீத் சிங் முதலில் ஒரு பயணியை ரயிலில் சுட்டுக் கொன்றார், அதன் பின்னர் ஒரு மருத்துவமனைக்குள் புகுந்து நோயாளி ஒருவரைச் சுட்டுக் கொன்றார். ஒவ்வொரு முறையும் தப்பிச் சென்ற இவர், இறுதியாகக் கடந்த திங்களன்று பிடிபட்டார். விசாரணையில் இவர் பீகாரில் ஒரு தனியார் செக்யூரிட்டி வேலையிலிருந்து நீக்கப்பட்டதால் ஏற்பட்ட ஆத்திரத்தில், கண்ணில் பட்ட அந்நியர்களைத் தனது இலக்காகத் தேர்ந்தெடுத்துக் கொலை செய்தது தெரியவந்தது.
இந்நிலையில், போலீஸார் அவரை குற்றச் சம்பவங்கள் நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டபோது, குர்பிரீத் சிங் போலீஸாரின் துப்பாக்கியைப் பறித்துத் தப்பிக்க முயன்று அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் இரண்டு காவலர்கள் காயமடைந்தனர். போலீஸார் தற்காப்புக்காக நடத்திய பதில் தாக்குதலில் குர்பிரீத் சிங் பலியானதாகச் சந்தௌலி எஸ்பி ஆகாஷ் படேல் உறுதிப்படுத்தினார்.
