விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தூத்துக்குடியிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற கார் ஒன்று, எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற மீன் லாரி மீது மோதி கோர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தங்கபாய் (60), ஜான் பிரிட்டோ (33) மற்றும் 10 வயது சிறுமி எவர்ஜெலின் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த மற்ற மூவர் மீட்கப்பட்டு விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகன் மற்றும் பேத்தி ஆகிய மூவர் உயிரிழந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்த விக்கிரவாண்டி காவல்துறையினர் உடனடியாக நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
