“சுற்றுலாவின் கடைசி நிமிடம்…” ஜாலியாக கடலில் விளையாடிய ஐடி ஊழியர்கள்…. ராட்சத அலையில் சிக்கி பலியான சோகம்… பகீர் பின்னணி…!!

By Devi Ramu on கார்த்திகை 3, 2026

Spread the love

கர்நாடக மாநிலம் கோகர்ணாவிற்கு வார இறுதிச் சுற்றுலா சென்ற பெங்களூரு ஐடி நிறுவனத்தைச் சேர்ந்த 3 ஊழியர்கள் கடலில் சீறிப்பாய்ந்த பிரம்மாண்ட அலையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு பெல்லந்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் ‘அலோரியா எகோபேஸ்’ நிறுவனத்தில் பணிபுரியும் 16 ஊழியர்கள், வார இறுதி விடுமுறையைக் கொண்டாடக் கர்நாடக மாநிலம் கோகர்ணா பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். துப்பனாஷி கடற்கரை அருகே உள்ள ரிசார்ட்டில் தங்கியிருந்த அவர்கள், கடலில் இறங்கி விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக எழும்பிய ராட்சத அலை 5 பேரை அடித்துச் சென்றது.

அங்கிருந்த உயிர்காப்பாளர்கள் மற்றும் மீனவர்கள் உடனடியாகச் செயல்பட்டு 4 பேரைக் கரைக்குக் கொண்டு வந்தனர். இருப்பினும், ஜார்க்கண்டைச் சேர்ந்த ஷோபா தாஸ் (22) என்ற பெண் மருத்துவமனையிலும், டீம் லீடர் முகமது அக்ரம் மணிப்பால் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலும் பரிதாபமாக உயிரிழந்தனர். அலையில் அடித்துச் செல்லப்பட்டு மாயமான பெங்களூரைச் சேர்ந்த விஷ் (24) என்பவரின் சடலம் பின்னர் மீட்கப்பட்டது. லைஃப்கார்டுகளால் காப்பாற்றப்பட்ட நிஷாந்த் மற்றும் முகமது காசிம் ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து கோகர்ணா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, கடற்கரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு விடுதி உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.