தஞ்சாவூர் டூ மணிப்பூர்….. கிராமத்து பள்ளியில் படித்து ஐஏஎஸ் அதிகாரியான தமிழ் பெண்… 28 வயதில் கலெக்டர் நாற்காலியில் அமர்ந்த ஏஞ்சலின் ரெனீட்டா….!

By Nanthini on ஆவணி 16, 2026

Spread the love

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 28 வயதான ஏஞ்சலின் ரெனிட்டா, மணிப்பூர் மாநிலத்தின் இளம் வயது மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்று ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார். 1998-ல் பிறந்த இவர், 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு உதவி பெறும் பள்ளியிலேயே தமிழ் வழியில் பயின்று சாதனை படைத்துள்ளார். பள்ளிக் கல்வியில் பத்தாம் வகுப்பில் 490 மதிப்பெண்களும், பன்னிரண்டாம் வகுப்பில் 1158 மதிப்பெண்களும் பெற்றுத் தேறியவர், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரியில் வேளாண்மை மற்றும் நீர்ப்பாசனப் பொறியியல் பிரிவில் பட்டம் பெற்றுத் தங்கப் பதக்கமும் வென்றார்.

படிப்பில் தொடர்ந்து முதன்மை வகித்த ஏஞ்சலின் ரெனிட்டா, 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற UPSC குடிமைப் பணிகள் தேர்வில் அகில இந்திய அளவில் 338-வது இடத்தைப் பிடித்து IAS அதிகாரியாகத் தேர்வானார். 2022-ஆம் ஆண்டு மணிப்பூர் கேடரில் தனது அதிகாரப்பூர்வப் பணியைத் தொடங்கிய இவர், லாம்ஃபெல் பகுதியின் SDO, மணிப்பூர் மாநில உள்துறை இணைச் செயலாளர் மற்றும் மணிப்பூர் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் திட்ட இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அரசுப் பொறுப்புகளை மிகச் சிறப்பாக நிர்வாகித்துள்ளார்.

   

இவரது சுறுசுறுப்பான மற்றும் துடிப்பான களப்பணியைக் கண்ட மணிப்பூர் மாநில அரசு, இவருக்குப் பதவி உயர்வு வழங்கி காக்சிங் மாவட்டத்தின் ஆட்சியராக நியமித்துள்ளது. தமிழ் வழியில் படித்துத் தனது கடின உழைப்பாலும், விடாமுயற்சியாலும் மணிப்பூர் மாநிலத்தின் மிக இளைய ஆட்சியராக உருவெடுத்துள்ள ஏஞ்சலின் ரெனிட்டாவுக்குப் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இவரது இந்தச் சாதனை தமிழ்நாட்டு இளைஞர்களுக்கும், குறிப்பாகத் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கும் ஒரு பெரும் ஊக்கமாகவும் முன்னுதாரணமாகவும் திகழ்கிறது.