உத்தரப் பிரதேச மாநிலம் பிருந்தாவனத்தில், பிரபல ஆன்மீகத் துறவி பிரேமானந்த் மகாராஜிடம் தீட்சை பெற்ற 25 வயது இளம் துறவி, ஆசிரமக் கட்டிடத்தின் 4-வது மாடியில் இருந்து குதித்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிருந்தாவனத்தின் வராக் காட் பகுதியில் பிரேமானந்த் மகாராஜின் கேலிகுஞ்ச் ஆசிரமமும், அதன் அருகே அவரது தீட்சை பெற்ற சீடர்கள் மட்டும் தங்கும் ‘குரு கிருபா குஞ்ச்’ என்ற 4 மாடி கட்டிடமும் அமைந்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரைச் சேர்ந்த தீபக் என்ற ரசிக் துலாரி ஷரன் (25) கடந்த இரண்டு ஆண்டுகளாக இங்கு தங்கி ஆன்மீகப் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை அவர் கட்டிடத்திலிருந்து கீழே குதித்து பலத்த காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சர்வோதயா மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இந்த மரணம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், ரசிக் துலாரி ஷரன் தங்கியிருந்த அறையைச் சோதனையிட்டபோது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. அவரது அறையிலிருந்து ஒரு நாட்குறிப்பும் (டைரி), ரத்தக்கறை படிந்த அரைக்கும் கருவியும் (கிரைண்டர்) கண்டெடுக்கப்பட்டன. மேலும், உயிரிழந்த துறவியின் பிறப்புறுப்பு துண்டிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டதால், இது சாதாரண தற்கொலையா அல்லது திட்டமிட்ட கொலையா என்ற கோணத்தில் வழக்கு மிகவும் தீவிரமடைந்துள்ளது. அறையில் கைப்பற்றப்பட்ட அரைக்கும் கருவியைக் கொண்டே அந்த காயம் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என காவல் துறையினர் பலமாக சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் நடந்த கட்டிடத்தின் மேல் தளத்திலிருந்து ரசிக் துலாரி ஷரன் கீழே குதிப்பது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், அவர் சுயநினைவோடு இதைச் செய்தாரா அல்லது வேறு யாரேனும் அவரைத் தாக்கி, காயப்படுத்தி அதன்பின் கீழே தள்ளிவிட்டனரா என்பது குறித்துத் தடயவியல் குழுவினர் நேரில் ஆய்வு செய்து ஆதாரங்களைச் சேகரித்து வருகின்றனர். தீவிர மன அழுத்தம் காரணமாக அவரே இந்த முடிவை எடுத்தாரா அல்லது இதன் பின்னணியில் வேறு நபர்கள் உள்ளார்களா என்பதைக் கண்டறிய அவரது டைரியில் உள்ள குறிப்புகளையும் போலீசார் தீவிரமாக வாசித்து ஆராய்ந்து வருகின்றனர்.
இளம் துறவியின் இந்த மர்ம மரணம் பிருந்தாவன ஆன்மீகவாதிகள் மற்றும் பிரேமானந்த் மகாராஜின் சீடர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆசிரமத்தைச் சுற்றியுள்ள அனைத்து சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றியுள்ள காவல்துறையினர், சம்பவம் நடந்த நேரத்தில் அங்கு வந்தவர்கள் யார் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் தடயவியல் ஆய்வுகளின் முடிவிலேயே இந்த கொடூர சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மை நிலவரம் முழுமையாக வெளிச்சத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
