மகாராஷ்டிர மாநிலம் பாலேவாடி-மாலுங்கே சாலையில் புதன்கிழமை இரவு 11:18 மணி அளவில் நடுக்கத்தை ஏற்படுத்தும் கொடூர விபத்து ஒன்று நடந்துள்ளது. வி.டி.பி அல்டைன் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீஹரி (25) என்ற வாலிபர், தனது இருசக்கர வாகனத்தில் பாலேவாடியில் இருந்து மாலுங்கே கிராமத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது சாலையில் அதிகளவில் கொட்டிக்கிடந்த சேறு மற்றும் சகதியால், எதிர்பாராதவிதமாக அவரது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சறுக்கி விழுந்தது. மேலும் அப்பகுதியில் தெருவிளக்குகள் எரியாததால் இருளாக இருந்த நிலையில், எதிரே வந்த லாரி டிரைவரால் வாகனத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் ஸ்ரீஹரி மீது லாரி ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்தின் அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கடந்த ஆகஸ்ட் 17 அன்று இதே பகுதியில் குழியிலும் சேற்றிலும் பைக் சறுக்கி விழுந்து 11 வயதுச் சிறுவன் பலியான நிலையில், தற்போது இரண்டே வாரத்தில் இரண்டாவது பலி நடந்துள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியமே உயிரிழப்பிற்குக் காரணம் எனக் கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
