தமிழக பாஜகவின் முன்னாள் மாநில தலைவரான அண்ணாமலை கட்சியில் இருந்து விலகி, ‘வி தி லீடர்ஸ்’ என்ற அமைப்பைத் தொடங்கிச் செயல்பட்டு வருகிறார். விரைவில் இதை அரசியல் கட்சியாக மாற்ற உள்ளதாக அவர் அறிவித்துள்ள நிலையில், இ அமைப்பில் இதுவரை 19 லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் இணைந்துள்ளனர். பொள்ளாச்சியில் நடைபெற்ற மாநாட்டிற்குப் பிறகு அண்ணாமலை அமைதி காத்து வந்த போதிலும், பாஜகவிலிருந்து பல நிர்வாகிகள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு அண்ணாமலையின் பின்னணிக்குச் சென்று அவரது அமைப்பில் இணைந்தது பாஜகவிற்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்பட்டது.
இந்நிலையில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அமைதியான முறையில் தீவிர காய்களை நகர்த்தி அண்ணாமலைக்குத் திடீர் அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார். அண்ணாமலையை நம்பிச் சென்று ‘வி தி லீடர்ஸ்’ அமைப்பில் இணைந்த திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 25 முக்கிய நிர்வாகிகளை, நயினார் நாகேந்திரன் மீண்டும் பாஜகவிற்கே இழுத்து வந்துள்ளார். திருநெல்வேலியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து இந்த மறு இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
பாஜகவிற்குத் திரும்பியவர்களில் திருநெல்வேலி மாவட்ட ஓபிசி பிரிவின் மாவட்ட பொதுச் செயலாளர் வெங்கடேஷ், புரோட்டோகால் பிரிவின் மாவட்டச் செயலாளர்கள் பேச்சிமுத்து, கோவிந்தராஜன், என்ஜிஓ பிரிவின் பட்டு ராஜா, ஊடகப் பிரிவின் ஆறுமுக நயினார் மற்றும் பல்வேறு மண்டல் தலைவர்கள், பூத் தலைவர்கள் உட்பட 25 முக்கிய நிர்வாகிகள் அடங்குவர். இவர்கள் அனைவரும் பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகியபோது அவருடன் சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டமன்றத் தேர்தல் சூழல்கள் மற்றும் கட்சி மாற்றங்கள் நிலவி வரும் இந்தச் சமயத்தில், விலகிச் சென்ற முக்கிய நிர்வாகிகளை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வந்தது நயினார் நாகேந்திரனுக்கு அரசியல் ரீதியாகப் பெரும் பலத்தைக் கொடுத்துள்ளது. அதே வேளையில், புதிய அரசியல் கட்சியைத் தொடங்கும் முனைப்பில் இருக்கும் அண்ணாமலைக்குத் தனது சொந்த மாவட்டப் பகுதியிலேயே நிர்வாகிகள் மீண்டும் பாஜகவிற்குத் திரும்பியது ஒரு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
