தமிழகத்தில் ஊழல் மற்றும் லஞ்சத்திற்கு எதிரான நடவடிக்கைகளை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரையிலான ஒரே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட 24 பொறிவைப்பு நடவடிக்கைகளின் மூலம், லஞ்சம் பெற்ற 24 அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அறநிலையத்துறை இணை ஆணையாளர், வட்டாட்சியர், காவல் உதவி ஆய்வாளர், மின்வாரிய பொறியாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் வரை பல்வேறு மட்டங்களைச் சேர்ந்த அதிகாரிகள் இதில் அடங்குவர். அரசுப் பணிகளைச் செய்து தர ரூ.500 முதல் ரூ.1 லட்சம் வரை லஞ்சமாகக் கோரி பெற்றபோதே இவர்கள் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் கையும் களவுமாகப் பிடிபட்டுள்ளனர்.
பொறிவைப்பு கைதுகள் மட்டுமின்றி, மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்கள் மற்றும் எல்லைச் சோதனைச் சாவடிகளிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனைகளை நடத்தியுள்ளனர். கிருஷ்ணகிரி, திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 13 அரசு அலுவலகங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் கணக்கில் வராத ரூ.13.39 லட்சமும், 6 எல்லைச் சோதனைச் சாவடிகளில் நடத்திய சோதனையில் ரூ.9.87 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், கடந்த ஜூலை 17-ஆம் தேதி தாலுகா அலுவலகங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ரூ.13.88 லட்சம் ரொக்கமும், சந்தேகத்திற்கு இடமான வகையில் ‘ஜி-பே’ (G-Pay) வாயிலாக பரிவர்த்தனை செய்யப்பட்ட ரூ.94.69 லட்சமும் கண்டறியப்பட்டு, மொத்தம் ரூ.1.31 கோடிக்கும் அதிகமான தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
லஞ்ச ஒழிப்புத் துறையின் இந்த நடவடிக்கை தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், லஞ்சப் புகாரில் சிக்கும் அதிகாரிகள் மீது உடனடியாக துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் திருநெல்வேலியில் உள்ள சிறப்பு காவல்படை பட்டாலியனில் காவலர்களுக்கு விடுப்பு வழங்க லஞ்சம் வசூலித்த புகாரில் ஒரு காவல் உதவி ஆய்வாளர் மற்றும் தலைமைக்காவலர் ஆகிய இருவர் பணியிடை நீக்கம் (Suspension) செய்யப்பட்டதுடன், மேலும் மூன்று போலீசார் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல், திருப்பூரில் ஒப்பந்தப் பணிக்கான பில் தொகையை வழங்க ரூ.20,000 லஞ்சம் வாங்கிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் சேலத்தில் மின் இணைப்பு வழங்க ரூ.7,000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவிப் பொறியாளர் என கடந்த சில நாட்களிலேயே அடுத்தடுத்து பலர் கைதாகியுள்ளனர். அரசுத் துறைகளில் லஞ்சத்தை ஒழிக்கும் நோக்கில் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் இந்தத் தொடர் சோதனைகளும், கைது நடவடிக்கைகளும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.
