2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்தத் தேர்தலில் வழக்கமான திராவிடக் கட்சிகளுக்கு இடையேயான போட்டியைத் தாண்டி, நடிகர் விஜய் தலைமையிலான ‘தமிழக வெற்றிக் கழகம்’ (TVK) ஒரு முக்கிய சக்தியாக உருவெடுக்கும் என்று சமீபத்திய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, ஒரு தனியார் ஊடகத்தின் உள்ளக ஆய்வு முடிவுகளின்படி, தமிழக வெற்றிக் கழகம் சுமார் 30 சதவீதத்திற்கும் அதிகமான வாக்கு வங்கியைப் பெற்று, மாநிலத்தின் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுவது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய அரசியல் சூழலில், ஆளுங்கட்சியான திமுக மற்றும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக ஆகிய இரு துருவ அரசியலுக்கு மாற்றாக ஒரு புதிய சக்தியை மக்கள் எதிர்பார்ப்பதாகத் தெரிகிறது. விஜய்யின் வருகை குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, மதுரை, திருப்புூர் போன்ற நகர்ப்புறங்களில் டிவிிகே வலுவான நிலையில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம், இந்த வாக்குகள் வெற்றியாக மாறுமா அல்லது மற்ற கட்சிகளின் வாக்கு வங்கியைப் பிரிக்கும் ‘கேம் சேஞ்சராக’ அமையுமா என்பது விவாதத்திற்குரிய ஒன்றாகவே நீடிக்கிறது.
கூட்டணி விவகாரங்களைப் பொறுத்தவரை, தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிடுவதிலேயே உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது. அண்மையில் பாஜாக அல்லது அதிமுகவுடன் கூட்டணி சேரப்போவதாக எழுந்த வதந்திகளை அக்கட்சித் தலைமை முற்றிலுமாக மறுத்துள்ளது. 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதற்கான ஆயத்தப் பணிகளில் விஜய் தீவிரம் காட்டி வருகிறார். “தனித்துவமான அரசியல் பாதை” என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் விஜய், திராவிட மற்றும் தேசியக் கட்சிகளுக்கு ஒரு சவாலான மாற்றாகத் தன்னை முன்னிறுத்த முயன்று வருகிறார்.
தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள அட்டவணைப்படி, வரும் ஏப்ரல் 23-ம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஆளுங்கட்சியான திமுக தனது செல்வாக்கைத் தக்கவைத்துக்கொள்ளப் போராடும் வேளையில், அதிமுக தனது பழைய பலத்தை நிரூபிக்கத் துடிக்கிறது. இந்த இரு முனைப் போட்டிக்கு நடுவே, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பெறும் ஒவ்வொரு வாக்கும் தமிழக அரசியலின் போக்கை மாற்றியமைக்கக் கூடியது. மே 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் போதுதான், தமிழக அரசியலில் “தளபதி”யாக விஜய் ஜொலிப்பாரா என்பது உறுதியாகும்.
