உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பலவிதமான திருவிழாக்கள் நடக்கும். திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை முன்னிட்டு காலையில் பரணி தீபமும் மாலையில் மலை மீது ஏற்றப்படும் மகா தீபமும் மிக மிக விசேஷமானது. குறைந்தபட்சம் 40 லட்சம் வரை பக்தர்கள் கார்த்திகை மாதம் தீபத் திருவிழா அன்று திருவண்ணாமலைக்கு செல்வார்கள். 2025 கார்த்திகை தீபத் திருவிழா திருவண்ணாமலையில் நவம்பர் 24 தொடங்கி டிசம்பர் 3ஆம் தேதி நிறைவடைகிறது. டிசம்பர் 3 ஆம் தேதி பரணி தீபம் மற்றும் மகாதீபம் ஏற்றப்படும் நாளாகும்.
கார்த்திகை தீபத்திருநாள் அன்று திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் காலை நான்கரை மணியளவில் பரணி தீபமும் மாலை 6 மணிக்கு கார்த்திகை மகா தீபமும் ஏற்றப்படும். இந்நிலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப விழாவின் முக்கிய நிகழ்வுகளான பரணி தீபம் தரிசிக்க 500 ரூபாய் கட்டணத்தில் 500 நபர்களுக்கும், மகாதீபம் தரிசிக்க கோவிலுக்குள் செல்ல 600 ரூபாய் கட்டணத்தில் 100 நபர்களுக்கும், 500 ரூபாய் கட்டணத்தில் ஆயிரம் நபர்களுக்கும் அனுமதி சீட்டுகள் வழங்கப்படும். கட்டட அனுமதி சீட்டுகளை https://annamalaiyar.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் பெற்றுக்கொள்ளலாம். டிசம்பர் 1 இன்று காலை 10 மணி முதல் இணையதளம் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
