டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஜூலை 20 அன்று சி.ஜே.பி அமைப்பு நடத்திய நாடாளுமன்றத்தை நோக்கிய பேரணியின் போது, போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்தப் பாதுகாப்புப் படையினர் பெல்லட் குண்டுகளை பயன்படுத்தியதாகக் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமாக ஜம்மு காஷ்மீரில் மட்டுமே பயன்படுத்தப்படும் இந்த ரகக் குண்டுகள், டெல்லி பேரணியில் பயன்படுத்தப்பட்டு 25 வயது இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளது மருத்துவ ஆவணங்கள் மூலம் உறுதியாகியுள்ளது.
கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீசப்பட்ட சூழலில், தன் மீது 20-க்கும் மேற்பட்ட பெல்லட் குண்டுகள் பாய்ந்ததாகப் பாதிக்கப்பட்ட இளைஞர் தெரிவித்துள்ளார். சாஃப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உடலிலிருந்த குண்டுகள் அகற்றப்பட்ட நிலையில், அவர் தற்போது வீட்டில் நலமடைந்து வருகிறார். தலைநகரில் போராட்டக்காரர்கள் மீது இத்தகையக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
