127 பயணிகளுடன் நடுவானில் நடந்த ‘திக்திக்’ நிமிடம்… 2 மணி நேரம் வானத்திலேயே வட்டமடித்த இண்டிகோ விமானம்…. திருச்சியில் பரபரப்பு….!

By Nanthini on ஆவணி 22, 2026

Spread the love

திருச்சியில் இருந்து 127 பயணிகளுடன் சிங்கப்பூர் புறப்பட்ட இண்டிகோ (6E 1007) விமானத்தில் நடுவானில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அது மீண்டும் திருச்சி விமான நிலையத்திலேயே பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது. மாலை 6.30 மணிக்கு புறப்பட்ட சில நிமிடங்களிலேயே இந்த கோளாறு கண்டறியப்பட்டதால், மேற்கொண்டு பயணிப்பது ஆபத்து என்பதை உணர்ந்த விமானிகள் உடனடியாகக் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொண்டு நிலைமையை விளக்கினர்.

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தரையிறங்க வேண்டிய சூழல் உருவானதால், அதில் எரிபொருள் முழுமையாக இருந்தது. அதிக எரிபொருளுடன் தரையிறங்குவது பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்பதால், எரிபொருளின் அளவைக் குறைப்பதற்காக விமானத்தை வானிலேயே வட்டமடிக்க விமானிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதன் காரணமாக, சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக திருச்சி வான்வெளியில் வட்டமடித்த விமானம், இரவு 8.55 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது.

   

பயணிகள் அனைவரும் எவ்வித காயமுமின்றி பாதுகாப்பாக மீட்டெடுக்கப்பட்ட நிலையில், இச்சம்பவம் குறித்து பேசிய விமான நிலைய இயக்குநர் ஜி. கோபாலகிருஷ்ணன், பயணித்த 127 பேருக்கும் சனிக்கிழமை அதிகாலையில் மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்படுவர் எனத் தெரிவித்தார். விமானிகளின் சுதாரிப்பான நடவடிக்கையினாலும், கட்டுப்பாட்டு அறையின் சரியான வழிகாட்டுதலினாலும் ஒரு பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு பயணிகள் நிம்மதி அடைந்தனர்.