திருவண்ணாமலை மாவட்டம் கழிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர விவசாயி சக்திவேல். இவரது மனைவி அம்சா (28). இவர்களுக்கு நிவிஸ்தா (4) என்ற மகளும், நிவிலன் (1.5) என்ற மகனும் உள்ளனர். கடந்த மாதம் 15 அன்று கைக்குழந்தை நிவிலனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே அம்சா குழந்தையைத் தூக்கிக்கொண்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பேருந்தில் சென்றார். அதன்பின் இருவரும் வீடு திரும்பவில்லை.
அதிர்ச்சியடைந்த சக்திவேல் உறவினர்களுடன் பல இடங்களில் தேடினார். அன்று இரவு 8 மணிக்கு எஸ்.கே.பி கல்லூரி அருகே நிவிலன் தனியாக அழுதபடி நின்றான். அங்கு சென்ற பெண் ஒருவர் குழந்தையை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தார். போலீசார் விசாரித்தபோது சக்திவேல் தேடுவது தெரியவந்தது. கீழ்பென்னாத்தூர் போலீசார் சக்திவேலை வரவழைத்து குழந்தையை ஒப்படைத்து விசாரித்தனர்.
அம்சா எங்கு போனார் எனத் தெரியவில்லை என சக்திவேல் பதறினார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து அம்சாவைத் தேடினர். இந்த நிலையில் நேற்று ஏந்தல் சம்மந்தனூர் கரும்புத் தோட்டத்தில் துர்நாற்றம் வீசியது. தகவலறிந்த போலீசார் வந்து மூட்டையைத் திறந்தபோது அழுகிய இளம்பெண் சடலம் இருந்தது. உடலை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
பின்னர் மாயமானவர்கள் விவரங்களைச் சரிபார்த்தபோது கொல்லப்பட்டவர் அம்சா என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது ஸ்கூட்டியில் ஒரு பெண் ஆணுடன் சந்தேகமாகச் சுற்றியது பதிவாகியிருந்தது. அப்பெண் கழிக்குளம் பகுதியை சேர்ந்த நேத்ரா (30) எனத் தெரியவந்தது. கணவரைப் பிரிந்த நேத்ரா வேங்கிக்காலில் தனியாக வசித்து வந்தார். அவருக்கு கொல்லக்கொட்டை பகுதியை சேர்ந்த திருப்பதியுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தார்.
இருவரையும் பிடித்து விசாரித்தபோது நேத்ரா கொலையை ஒப்புக்கொண்டார். அம்சா மருத்துவமனைக்குச் செல்லும்போது நேத்ரா ஆட்டோவில் பார்த்து பேச்சுக் கொடுத்தார். ஒரே ஊர் என்பதால் அம்சா சகஜமாகப் பேசியுள்ளார். அம்சாவின் 4 பவுன் தங்கச் செயினைப் பார்த்த நேத்ரா அதைப் பறிக்கத் திட்டமிட்டு வீட்டுக்கு அழைத்துச் சென்று எதிர்பாராத நேரத்தில் தாக்கி செயினைப் பறித்துள்ளார்.
பின்னர் அம்சா போலீசிடம் செல்வாள் என அஞ்சி கழுத்தை நெரித்துக் கொலை செய்து உடலை சாக்கில் கட்டி கரும்புத் தோட்டத்தில் வீசியுள்ளனர். சந்தேகம் வராமல் இருக்க குழந்தையை எஸ்.கே.பி கல்லூரி அருகே விட்டுவிட்டு தப்பினர். நேற்று போலீசார் நேத்ரா, திருப்பதியை கைது செய்தனர். 4 பவுன் நகைக்காகவா அல்லது வேறு காரணமா எனத் தீவிர விசாரணை நடக்கிறது.
