1983 உலகக்கோப்பை வெற்றி பார்ட்டி பில் உண்மையா..? முன்னாள் வீரர் அதிரடி விளக்கம்…!!

By Swetha on வைகாசி 21, 2026

Spread the love

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட நாள் 1983 ஜூன் 25. அன்று கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது. இந்நிலையில், லண்டனில் உள்ள ‘கிராஸ்வெனார்’ ஹோட்டலில் இந்திய அணி வீரர்கள் பீர், ஷாம்பெயின், விஸ்கி மற்றும் சிகரெட் போன்றவற்றை வாங்கி இந்த வரலாற்று வெற்றியை விடிய விடியக் கொண்டாடியதாகக் கூறி, £764 மதிப்பிலான ஹோட்டல் ரசீது (பில்) ஒன்று சமூக வலைதளங்களில் சமீபத்தில் தீயாய் பரவி ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. அந்த ரசீதில் கேப்டன் கபில்தேவின் கையெழுத்தும் இடம் பெற்றிருந்ததால் பலரும் இதனை உண்மை என்றே நம்பினர்.

சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வந்த இந்த சொகுசு பார்ட்டி பில் முற்றிலும் போலியானது என்று 1983 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் கீர்த்தி ஆசாத் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டு இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். லண்டன் லார்ட்ஸ் மைதானத்திற்கு அருகில் உள்ள ‘வெஸ்ட்மோர்லேண்ட்’ ஹோட்டலில்தான் இந்திய அணி தங்கியிருந்ததாகவும், ஜூன் 25 இரவு முழுவதும் அங்கேயேதான் தங்களது வெற்றிக் கொண்டாட்டங்கள் நடந்தன என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். நாங்கள் குறிப்பிட்ட அந்த கிராஸ்வெனார் ஹோட்டலுக்குச் செல்லவே இல்லை என்றும், அதில் உள்ள கபில்தேவின் கையெழுத்து போலியாகப் போடப்பட்டுள்ளது என்றும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

   

கீர்த்தி ஆசாத்தின் இந்த மறுப்புப் பதிவைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் அந்த வைரல் பில்லை உன்னிப்பாகக் கவனித்து அதில் உள்ள பல்வேறு குளறுபடிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தனர். குறிப்பாக, அந்த பில்லில் மொத்தத் தொகையான 704 பவுண்டுகளுக்கு 10 சதவீத சேவை வரிக் கட்டணமாக 70.40 பவுண்டுகள் போடுவதற்குப் பதிலாக 60.40 பவுண்டுகள் என தவறாகக் கணக்கிடப்பட்டிருந்தது. மேலும், 1983-ல் கணினிகளில் பயன்படுத்த முடியாத பல்வேறு நவீன எழுத்துருக்கள் (Fonts) அதில் இருந்ததால், இது ஏஐ (AI) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட போலியான பில் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.