2026-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற 224 எம்.எல்.ஏ-க்களின் சொத்து விவரங்களை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) மற்றும் தமிழ்நாடு தேர்தல் கண்காணிப்பகம் ஆய்வு செய்தன. கடந்த தேர்தலை விட இந்த முறை கோடீஸ்வர எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை அதிகரித்து 193-ஆக உயர்ந்துள்ளது. இதில் திருவள்ளூர் தொகுதியில் தமிழக வெற்றி கழகம் (தவெக) சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டி. அருண்குமாரின் ஆவணங்கள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் தெளிவாக இல்லாத காரணத்தால், அவரது சொத்து விவரங்கள் இந்த ஆய்வில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆய்வின்படி, வெற்றி பெற்ற 193 எம்.எல்.ஏ-க்களின் சராசரி சொத்து மதிப்பு 48.35 கோடி ரூபாயாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதில் லால்குடி தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற லீமாரோஸ் 58,637+ கோடி ரூபாய் சொத்துக்களுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற தமிழக வெற்றி கழகத் தலைவர் ச. ஜோசப் விஜய் 648+ கோடி ரூபாய் சொத்துக்களுடனும், வில்லிவாக்கம் தவெக வேட்பாளர் அதவ் அர்ஜுனா 534 கோடி ரூபாய் சொத்துக்களுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
மறுபுறம், மிகக் குறைந்த சொத்து மதிப்புகளைக் கொண்ட எம்.எல்.ஏ-க்களாக தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்தவர்களே அதிகம் இடம்பெற்றுள்ளனர். ஆம்பூர் தொகுதி தவெக வேட்பாளர் தாஹிரா 4 லட்சத்திற்கும் குறைவான சொத்துக்களுடனும், மயிலம் தொகுதி தவெக வேட்பாளர் கே. சிவகுமார் 5 லட்சத்திற்கும் குறைவான சொத்துக்களுடனும் உள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக திருத்துரைப்பூண்டி (தனி) தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் கே. மாரிமுத்து 13 லட்சத்திற்கும் குறைவான சொத்து மதிப்புகளைக் கொண்டுள்ளார்.
கட்சிகளின் அடிப்படையில் சராசரி சொத்து மதிப்பை ஒப்பிடும்போது, அதிமுக எம்.எல்.ஏ-க்களின் சராசரி சொத்து மதிப்பு 152.89 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. அறிமுகத் தேர்தலிலேயே வலுவான இடத்தைப் பிடித்துள்ள தமிழக வெற்றி கழக எம்.எல்.ஏ-க்களின் சராசரி சொத்து மதிப்பு 27.09 கோடி ரூபாயாகவும், திமுக எம்.எல்.ஏ-க்களின் சராசரி சொத்து மதிப்பு 14.34 கோடி ரூபாயாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த புள்ளிவிவரங்கள் தமிழக அரசியல் களத்தில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைப் பிரதிபலிக்கின்றன.
