தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் கல்லூர் பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவன் ஜில்லேலா ரவி (15), தசரா விடுமுறைக்காகத் தனது சொந்த கிராமத்திற்கு வந்திருந்தார். அதே கிராமத்தில் கணவரைப் பிரிந்து பாட்டி வீட்டில் வசித்து வந்த அபர்ணா (19) என்ற பெண்ணுக்கும், 14 வயது சிறுவன் ஒருவருக்கும் இடையே தகாத உறவு இருந்துள்ளது. கடந்த அக்டோபர் 20-ம் தேதி இவர்கள் இருவரும் தனிமையில் இருந்ததை ரவி நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து, இந்த விவகாரத்தை இருவரது குடும்பத்தினரிடமும் தெரிவித்துவிடுவதாக ரவி எச்சரித்துள்ளார்.
தங்களது உறவு வெளியே தெரிந்துவிடுமோ என்ற அச்சத்தில், ரவியைத் தீர்த்துக்கட்ட அந்த ஜோடி திட்டமிட்டது. அதன்படி, அக்டோபர் 21-ம் தேதி அந்த 14 வயது சிறுவன், ரவியை ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று களைக்கொல்லி மருந்து கலந்த குளிர்பானத்தைக் கொடுத்துள்ளான். அதனைக் குடித்த சிறிது நேரத்திலேயே ரவிக்குத் தொண்டையில் கடுமையான எரிச்சலும், வாயில் கொப்புளங்களும் ஏற்பட்டன. சந்தேகமடைந்த ரவி இதுகுறித்து விசாரித்தபோது, குளிர்பானத்தில் விஷம் கலந்திருந்ததை அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
உடனடியாக ரவி நடந்த சம்பவத்தைத் தனது பெற்றோரிடம் தெரிவித்ததை அடுத்து, அவர் கம்மம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் மேல் சிகிச்சைக்காக வாரங்கால் எம்.ஜி.எம். அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த நவம்பர் 8-ம் தேதி ரவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மாணவன் அளித்த வாக்குமூலம் மற்றும் பெற்றோரின் புகாரின் அடிப்படையில் கல்லூர் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து அபர்ணா மற்றும் 14 வயது சிறுவனைக் கைது செய்த போலீசார், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின்பேரில் அபர்ணா சத்துப்பள்ளி துணைச் சிறையிலும், 14 வயது சிறுவன் வாரங்கால் சிறார் சீர்திருத்த இல்லத்திலும் அடைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
