அரியானா மாநிலம் சோனிபெட் மாவட்டத்தில் 19 வயது இளம்பெண் ஒருவர் மூன்று நபர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த ஜனவரி 16 ஆம் தேதி, பஹல்கேஷ் கிராமத்தைச் சேர்ந்த அந்த இளம்பெண் ஐடிஐ சவுக் பகுதியில் தனது வீட்டிற்குச் செல்ல வாகனத்திற்காகக் காத்திருந்துள்ளார். அப்போது அங்கு காரில் வந்த அதே கிராமத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள், தாங்களும் அதே ஊர் என்பதால் இளம்பெண்ணை வீட்டில் விடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அவர்கள் தெரிந்தவர்கள் என்பதால் அந்தப் பெண்ணும் நம்பிக்கையுடன் காரில் ஏறியதாகக் கூறப்படுகிறது.
கிராமத்திற்குச் செல்லும் வழியில், காரில் இருந்த இளைஞர்கள் மது அருந்தியதோடு, மக்கள் நடமாட்டம் இல்லாத தனிமையான இடத்திற்கு காரைச் செலுத்தி அந்த இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இக்கொடூரச் சம்பவத்திற்குப் பிறகு இளம்பெண்ணை கிராமத்தின் அருகே இறக்கிவிட்டுவிட்டு அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறை, குற்றவாளிகளில் ஒருவரை உடனடியாகக் கைது செய்துள்ளது. தலைமறைவாக உள்ள மற்ற இருவரைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
