கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு பகுதியில் உள்ள பிரபல JSS பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து முடித்த 19 வயதான பிரிதேஷ் ஜெயின் என்ற மாணவர், சமீபத்தில் நடைபெற்ற வளாக நேர்காணலில் கலந்துகொண்டு வேலை வாய்ப்பைப் பெற்றிருந்தார். செவ்வாய்க்கிழமை அன்று தனது வேலைக்கான பணி நியமன ஆணையை கல்லூரியில் பெறுவதற்காகத் தனது கல்லூரிக்கு வந்துள்ளார்.
கல்லூரி வாசலில் வீதியைக் கடக்கத் தயாராக நின்று கொண்டிருந்த அந்த மாணவர் மீது, அவ்வழியாகப் பறந்து வந்த அதிவேகச் சொகுசுக் கார் ஒன்று பயங்கரமாக மோதித் தூக்கி வீசியது. தூக்கி வீசப்பட்டுச் சாலையில் விழுந்த பிரிதேஷ் ஜெயின், தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இக்கொடூர விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர், பெங்களூரு பதிவு எண் கொண்டத் தனது காரை சம்பவ இடத்திலேயே போட்டுவிட்டுத் தப்பியோடிவிட்டான். வேலை கிடைத்த அதே நாளில் கல்லூரி வாசலிலேயே மாணவர் பலியான நெஞ்சை உலுக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆத்திரமடைந்த சக மாணவர்கள் தேசிய நெடுஞ்சாலையை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நஞ்சன்கூடு போக்குவரத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய ஓட்டுநரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
