கோட்டயம் மாவட்டத்தில் சுமார் 8 கிலோமீட்டர் தூரத்திற்கு நிற்காமல் அதிவேகமாக வந்த டொயோட்டா இன்னோவா கார், பல வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பயிப்பாட்டில் உள்ள வெள்ளப்பள்ளியில் இருந்து தொடங்கிய இந்த கார் சஞ்சோடி, மடப்பள்ளி, பெரும்பனாச்சி மற்றும் தெங்கனா வழியாகக் கண்ணோட்டா சந்திப்பு வரை வேகமாகச் சென்றுள்ளது. செல்லும் வழியில் பல வாகனங்களை இடித்துத் தள்ளிய பிறகும் ஓட்டுநர் காரை நிறுத்தாமல் தொடர்ந்து இயக்கியுள்ளார்.
காரின் முன்பக்க வலது டயர் வெடித்து, சக்கரத்தின் தட்டு சாலையில் உராயும்போது தீப்பொறிகள் பறந்த நிலையிலும் கார் நிறுத்தப்படாமல் சொன்றுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சக வாகன ஓட்டிகள் விபத்துகளைத் தடுக்க அந்த காரைத் பின்தொடர்ந்து விரட்டிச் சென்றுள்ளனர். இறுதியில், தெங்கனாவில் உள்ள கண்ணோட்டா சந்திப்பில் உள்ளூர் பொதுமக்கள் காரை மடக்கிப் பிடித்து நிறுத்தினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருக்கொடித்தானம் காவல் துறையினர், காரை ஓட்டி வந்த திருவல்லாவைச் சேர்ந்த கோகுல் பினு (18) என்ற இளைஞரைக் கைது செய்தனர். அந்த இளைஞர் போதைப்பொருட்களைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நிலையில், அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
