“உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முதல் மாடியிலிருந்து குதித்த கொடூரம்…” – லக்னோ தீ விபத்தில்… 15 பேர் பலியான பதறவைக்கும் பின்னணி… பிரதமர் மோடி அதிர்ச்சி இரங்கல்…!!

By Swetha on ஆனி 22, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ விபத்தில் சிக்கி, மாணவர்கள் உட்பட குறைந்தது 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையம் மற்றும் கேமிங் மண்டபம் செயல்பட்டு வந்த அந்தப் பல்லடுக்குக் கட்டிடத்தில், மதிய வேளையில் திடீரெனத் தீப்பற்றி சில நிமிடங்களிலேயே கரும்புகையுடன் கட்டிடம் முழுவதும் பரவியது. இதனால் அங்கு படித்துக் கொண்டிருந்த மாணவர்களும், விளையாட வந்திருந்த இளைஞர்களும் தப்பிக்க வழியின்றி அலறியடித்தபடி கட்டிடத்தின் முதல் மாடியில் இருந்து கீழே குதித்த சம்பவங்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தின.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், காவல்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் இணைந்து போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்திருப்பதை ட்ராமா சென்டரின் தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் பிரேம்ராஜ் சிங் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்; மேலும், காயமடைந்த பலருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கோர விபத்து குறித்து அறிந்த உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தனது அலிகார் பயணத்தைப் பாதியிலேயே ரத்து செய்துவிட்டு அவசரமாக லக்னோ திரும்பியதோடு, விபத்து நடந்த இடத்தை நேரடியாகப் பார்வையிடவும் உள்ளார்.

   

இச்சம்பவம் குறித்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் ஆறுதல் கூறியதுடன் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே, பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் உடனடியாக வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத், விபத்துக்கான காரணம் குறித்தும், கட்டிடத்தில் ஏதேனும் பாதுகாப்பு விதிமீறல்கள் உள்ளதா என்பது குறித்தும் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.