இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 3-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, நீட் தேர்வு ரத்து செய்யப்பட்ட விவகாரம் குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.கடந்த மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, வரும் ஜூன் 21-ஆம் தேதி நாடு முழுவதும் நீட் மறுதேர்வு நடத்தப்பட உள்ளது. இந்தத் தேர்வை எழுதும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தேசிய தேர்வு முகமை தேர்வுக்கான கால அவகாசத்தை 15 நிமிடங்கள் நீட்டித்துள்ளது. இதன் மூலம் வழக்கமான 180 நிமிடங்களுக்கு பதிலாக, மாணவர்கள் இனி 195 நிமிடங்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். இந்த மறுதேர்வு மதியம் 2:00 மணி முதல் மாலை 5:15 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு அறையில் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திடுவது, பயோமெட்ரிக் சரிபார்ப்பு மற்றும் பிற கண்காணிப்பு நடைமுறைகளால் மாணவர்களின் தேர்வு எழுதும் நேரம் வீணாவதாகப் புகார்கள் எழுந்தன. இதனைத் தவிர்க்கவே இந்த கூடுதல் 15 நிமிடங்கள் வழங்கப்பட்டுள்ளதாக என்.டி.ஏ விளக்கியுள்ளது. இந்த புதிய நேர நிர்வாகம் மூலம், மாணவர்கள் எந்தவித பதற்றமும் இன்றி தங்களுக்கான முழு தேர்வு நேரத்தையும் வினாக்களுக்குப் பதிலளிக்கப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
நேர நீட்டிப்புடன் சேர்த்து, வினாத்தாள் கையேட்டில் கணக்கீடுகள் மற்றும் வரைபடங்கள் வரைவதற்கான ‘ரஃப் ஒர்க்’ பக்கங்களின் எண்ணிக்கையை 2-லிருந்து 4 ஆக என்.டி.ஏ உயர்த்தியுள்ளது. மேலும், மாணவர்கள் கொடுத்த பின்னூட்டத்தின் அடிப்படையில் இதன் அமைப்பும் மாற்றப்பட்டுள்ளது. இதற்கு முன்பு அனைத்து ரஃப் பக்கங்களும் வினாத்தாளின் இறுதியில் மட்டுமே இருந்தன, இது இடது கை பழக்கம் உடைய மாணவர்களுக்குச் சற்று சிரமமாக இருந்தது.
