தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சருத்துப்பட்டியைச் சேர்ந்த சுதா என்பவரின் 14 வயது மகன் நிவாஸ் குமார், கடுமையான சளி மற்றும் உடல்நலக் குறைவு காரணமாகக் கடந்த ஜூன் 2-ஆம் தேதி பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவனுக்கு மூக்கில் சதை வளர்ந்துள்ளதாகக் கூறி அதற்கான சிகிச்சையைத் தொடங்கியுள்ளனர். அப்போது சுவாசக் குழாயில் செலுத்த வேண்டிய டியூப்பை தவறுதலாக உணவுக் குழாயில் செலுத்தி மருத்துவர்கள் தவறான சிகிச்சை அளித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் சிறுவனின் உடல்நிலை மோசமடைந்து அவர் கோமா நிலைக்குச் சென்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காகத் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு கடந்த 60 நாட்களுக்கும் மேலாகக் கோமா நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவன் நிவாஸ் குமார், இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த சிறுவனின் உடலைக் கண்டு தாயாரும் உறவினர்களும் கதறி அழுத சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையின் அலட்சியமே சிறுவனின் உயிரிழப்பிற்கு முக்கியக் காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இச்சம்பவம் குறித்துச் சிறுவனின் பெற்றோருக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் தேனி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். அதில், சிறுவனின் உடற்கூராய்வை உறவினர்கள் முன்னிலையில் முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். மேலும், மகனை இழந்து தவிக்கும் ஏழை குடும்பத்திற்கு அரசு உடனடியாக நிவாரண உதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பும் வழங்கிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
