சென்னையை அடுத்த சித்தலாம்பாக்கம் ஜெயாநகர் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சுரேஷ் – சரண்யா தம்பதியரின் மூத்த மகனான கணேஷ் (14), மாடம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு முடித்துவிட்டு, ஜூன் மாதம் தொடங்கவுள்ள பத்தாம் வகுப்பிற்காக ஒட்டியம்பாக்கம் மெயின் ரோட்டில் உள்ள ஒரு தனியார் டியூஷன் சென்டரில் படித்து வந்துள்ளார். நேற்று (மே 15) வழக்கம் போல டியூஷன் முடிந்து வீட்டிற்குச் செல்வதற்காகக் கட்டிடத்தின் படிக்கட்டில் கீழே இறங்கியபோது, அங்கிருந்த பால்கனியில் நின்று கொண்டு சாலையில் சென்ற ஒரு நபருக்குக் கணேஷ் ‘டாடா’ காட்டியுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாகப் பால்கனியை ஒட்டியபடி மிக அருகில் சென்ற உயர்மின் அழுத்த மின்கம்பி மீது சிறுவனின் கை பட்டுள்ளது.
மின்கம்பியில் கை பட்ட அடுத்த கணமே சிறுவன் கணேஷ் மீது மின்சாரம் பாய்ந்து, அவர் பால்கனியிலிருந்து சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே பலரின் கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து விரைந்து வந்த பெரும்பாக்கம் போலீசார், சித்தாலப்பாக்கம் மின்வாரிய அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு அப்பகுதியில் மின் இணைப்பைத் துண்டித்தனர். பின்னர், மின்சாரம் தாக்கி பலியான மாணவனின் உடலை மீட்ட போலீசார், உடற்கூறு ஆய்வுக்காகத் தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொதுவாகக் கட்டிடங்களின் அருகே ஆபத்தான முறையில் செல்லும் மின்கம்பிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பிளாஸ்டிக் குழாய்களைப் (PVC Pipes) பொருத்துவது வழக்கம். ஆனால், இந்த மூன்று அடுக்கு மாடிக் கட்டிடத்தின் உரிமையாளர் மற்றும் மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தால், எவ்விதப் பாதுகாப்பும் இன்றி மின்கம்பிகள் இருந்ததே சிறுவனின் மரணத்திற்குக் காரணம் எனப் பெற்றோரும் உறவினர்களும் குற்றம் சாட்டியுள்ளனர். கோடை விடுமுறையில் டியூஷனுக்குச் சென்ற பெற்ற மகன் மின்சாரம் தாக்கி பலியானதைக் கண்டு அவர்தம் பெற்றோரும் உறவினர்களும் கதறி அழுத காட்சி, அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
