ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் இதுவரை கண்டிராத உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) 48 மணி நேரத்திற்குள் திறக்க வேண்டும் என்றும், அமெரிக்காவின் 15 அம்ச போர் நிறுத்தத் திட்டத்தை ஏற்க வேண்டும் என்றும் அதிபர் டிரம்ப் விடுத்த கெடு இன்னும் சில மணி நேரங்களில் முடிவுக்கு வர உள்ளது. இதனை ஈரான் ஏற்கத் தவறினால், அந்நாட்டின் மின் நிலையங்கள் மற்றும் பாலங்கள் தவிடுபொடியாக்கப்படும் என்றும், ஒரே இரவில் ஈரானை நிலைகுலையச் செய்வோம் என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார். இதற்குப் பதிலடியாக, ஈரானைப் பாதுகாக்க 1.4 கோடி மக்கள் உயிர் தியாகம் செய்யத் தயாராக இருப்பதாக ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
ஈரான் அதிபரின் இந்த அறிவிப்பு உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தனது ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ள பெசஸ்கியான், “ஈரானைப் பாதுகாக்க நானும் எனது நாட்டு மக்களும் எந்நேரமும் உயிரைத் தரத் தயாராக இருக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார். ஈரானின் மொத்த மக்கள் தொகையான 9 கோடியில், சுமார் 1.4 கோடி பேர் இத்தகைய தியாகத்திற்குத் தயாராக இருப்பது அந்த நாட்டின் தேசப்பற்றையும், அமெரிக்காவிற்கு எதிரான அவர்களின் மனநிலையையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. முன்னதாக, அந்நாட்டு அமைச்சர் அலிரேசா ரஹிமி விடுத்த வேண்டுகோளின்படி, இளைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் மனிதச் சங்கிலியாகத் திரண்டு மின் நிலையங்களைப் பாதுகாக்கப் புறப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், அமெரிக்காவின் கெடு முடிவதற்கு முன்பே ஈரான் மீதான தாக்குதல்கள் தொடங்கிவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் எண்ணெய் உற்பத்தியில் மிக முக்கியமான பகுதியாகக் கருதப்படும் ‘கார்க் தீவு’ (Kharg Island) மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்கத் தளங்களில் இருந்து அதிநவீன ஆயுதங்கள் ஈரானை நோக்கிக் குறிவைக்கப்பட்டுள்ள நிலையில், கார்க் தீவில் கேட்ட வெடிச்சத்தம் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. அமெரிக்க உயர் அதிகாரி ஒருவரும் இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளதாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன.
அமெரிக்கா இன்று இரவு 8 மணிக்குள் (அமெரிக்க நேரப்படி) ஈரான் பணிய வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து வரும் நிலையில், ஈரான் அதனைத் துணிச்சலாக நிராகரித்துள்ளது. மின் நிலையங்கள் சிதைக்கப்பட்டால் நாடு இருளில் மூழ்கும் அபாயம் இருந்தாலும், “நமது வளங்களை நாம் தான் காக்க வேண்டும்” என்ற உணர்வுடன் ஈரான் மக்கள் களமிறங்கியுள்ளனர். ஒருபுறம் டிரம்பின் அழிவுப்பாதை எச்சரிக்கை, மறுபுறம் ஈரானின் உயிர் தியாக அறிவிப்பு என இந்த விவகாரம் மத்திய கிழக்கில் ஒரு மாபெரும் போருக்கான தொடக்கமாக அமையுமோ என்ற அச்சத்தை உலக நாடுகளிடையே ஏற்படுத்தியுள்ளது.
