தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் நோக்கில், மாநிலம் முழுவதும் ஒரே இரவில் அதிரடியாக 1,328 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தமிழகக் காவல் துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். முதல்வர் விஜய் தலைமையிலான புதிய அரசின் அதிரடி நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இத்தகைய தீவிரக் கண்காணிப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
மேலும், கடந்த ஜூன் 1-ஆம் தேதி முதல் ஜூன் 10-ஆம் தேதி வரையிலான குறுகிய காலத்திற்குள் மட்டும் மொத்தம் 2,939 பேர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத அரெஸ்ட் வாரண்ட் (பிடியாணை) பிறப்பிக்கப்பட்டுள்ளதாக டிஜிபி குறிப்பிட்டுள்ளார். குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டு இந்தத் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டுள்ளது.
இதனுடன், தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களைக் கடத்துபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களுக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, போதைப் பொருட்களைப் பெருமளவில் பறிமுதல் செய்துள்ள காவல் துறையினர், அதுதொடர்பான குற்றச் செயல்களில் தொடர்புடைய 202 குற்றவாளிகளையும் அதிரடியாகக் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
