சிங்காரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பேக்கரி உரிமையாளர் திருநாவுக்கரசு என்பவரது மகன் சஞ்சய் (12), அங்குள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வருகிறார். வழக்கம் போல் நேற்று மாலை டியூஷன் செல்வதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறிய சிறுவன், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிங்காரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, சிறுவன் சஞ்சய் சாலையோரத்தில் இருசக்கர வாகன ஓட்டிகளிடம் லிப்ட் கேட்டு ஏறிச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இதன் அடிப்படையில், சிறுவனை யாரேனும் கடத்திச் சென்றனரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், செஞ்சி, ஸ்ரீபெரும்புதூர், ராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்குள் அடுத்தடுத்து குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் மாயமான சம்பவங்கள் தமிழகத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் நடமாட்டத்தின் மீது கூடுதல் கவனம் செலுத்துவதோடு, இதுபோன்ற குற்றங்களைத் தடுத்திடக் காவல்துறையினரும் தீவிர பாதுகாப்பையும் தேடுதல் வேட்டையையும் துரிதப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.
