இளைஞர்களே தோத்துடுவாங்க…! திருப்பதி மலையில் 3550 படிக்கட்டுகளை அசால்ட்டாக ஏறிய 116 வயது பாட்டி… பக்தியின் சிகரம்…!

By SATHISH R on ஆடி 5, 2026

Spread the love

ஆன்மிகத்திற்கும் வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபிக்கும் வகையில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 116 வயது மூதாட்டி ஒருவர் திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். தள்ளாடும் வயதிலும், ஏழுமலையான் மீது அவர் கொண்டிருந்த அளவற்ற பக்தியால் இந்த அரிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். இந்த நெகிழ்ச்சியான சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி, ஒட்டுமொத்த பக்தர்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இவர்களில் பெரும்பாலான பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடனை செலுத்துவதற்காகவும், புண்ணியம் பெற வேண்டியும் திருப்பதியிலிருந்து அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு ஆகிய மலைப்பாதைகள் வழியாக நடந்தே செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பல கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்த செங்குத்தான மலைப்பாதையை கடப்பது இளைஞர்களுக்கே சவாலாக இருக்கும் சூழலில், இந்த மூதாட்டியின் துணிச்சல் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

   

இந்த நிலையில், கர்நாடகாவைச் சேர்ந்த 116 வயது மூதாட்டி தனது குடும்பத்தினரின் துணையோடு திருமலைக்கு வந்துள்ளார். வாகனங்களில் செல்லாமல், பாரம்பரிய முறைப்படி ஸ்ரீவாரிமெட்டு நடைபாத வழியாக செல்ல அவர் முடிவெடுத்தார். அதன்படி, சுமார் 9 கிலோமீட்டர் தூரம் கொண்ட கரடுமுரடான மலைப்பாதையில், மொத்தம் 3,550 படிக்கட்டுகளையும் தனது தள்ளாத வயதிலும் தளராத நம்பிக்கையுடன் ஒவ்வொன்றாக ஏறி திருமலையை அடைந்துள்ளார். பின்னர், அங்குள்ள திவ்யதரிசன வரிசையில் சென்று ஏழுமலையானை மனமுருகி வழிப்பட்டார்.

   

வயோதிகத்தால் ஏற்படும் உடல் உபாதைகளையும் பொருட்படுத்தாமல், இறைவனை நேரில் காண வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் அந்த மூதாட்டி மலை ஏறிய காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதைப் பார்த்த பக்தர்கள் பலரும், “இது வெறும் உடல் பலத்தால் சாத்தியமானது அல்ல, மூதாட்டியின் அசைக்க முடியாத தூய பக்தியால் மட்டுமே சாத்தியம்” என்று நெகிழ்ச்சியுடன் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.