நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் பொதிகை மலையின் உச்சியில் பூங்குளம் என்ற பகுதியில் இருந்து தாமிரபரணி ஆறு உற்பத்தி ஆகி வருகிறது. காரையாறு அணை பக்கத்தில் அகஸ்தியர் காலணி குடியிருப்பு உள்ளிட்ட இடங்களில் கானி இன பழங்குடியின மக்கள் வசித்து வருகிறார்கள். காரையார் அணைக்கு மேலே சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் அடர்ந்த காட்டுப்பகுதியில் பொதிகை மலை உச்சியின் அடிப்பகுதியில் இஞ்சிகுழி என்ற கிராமம் உள்ளது. இங்கு சுமார் 40 குடும்பத்தினர் வசித்து வந்த நிலையில் தற்போது மூன்று குடும்பத்தினர் மட்டுமே வசித்து வருகிறார்கள். அதில் குட்டியம்மாள் என்ற 110 வயதுடைய மூதாட்டி மட்டும் தார்பாயாலான வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.
மற்ற குடும்பத்தினர்கள் வேலைக்காக காரையாறு அணை அடிவாரத்துக்கு சென்று விட்டு அவ்வப்போது இங்கே வருகிறார்கள். இந்த அடர்ந்த காட்டில் தனியாக வசிக்கும் மூதாட்டி குட்டியம்மாளுக்கு கடந்த 2021 ஆம் வருடம் நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு முதியோர் உதவித்தொகை வழங்க உத்தரவிட்டார். மேலும் அவருடைய வீட்டுக்கு சோலார் மின் வசதி அமைத்தும் கொடுத்தார் . தபால் அலுவலகத்தில் இருந்து தபால் அலுவலர் கிறிஸ்துராஜா மாதந்தோறும் அங்கு நடந்தே சென்று இந்த மூதாட்டிக்கு உதவி தொகை வழங்கி வருகிறார்.
வயதானால் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார் அந்த மூதாட்டி . மேலும் காரையாறில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று உணவு பொருட்களை வாங்க முடியாத நிலையில் உள்ளது. 40 குடும்பத்தினர்கள் வசித்தார்கள். தற்போது நான் மட்டுமே வசிக்கிறேன். இங்கு எந்த வசதியும் இல்லாததால் பலரும் மலையடிவாரத்துக்கு சென்று விட்டார்கள். யானைகள் பிளிறும் சத்தத்தை கேட்டு தான் காலையில் நான் கண்விழிப்பேன். சிறுத்தை, கரடி போன்ற விலங்குகள் இயல்பாகவே சுற்றி தெரியும். வயது முதிர்வு காரணமாக ரேஷன் கடைக்கு செல்ல முடியவில்லை. வனப்பகுதியில் கிடைக்கும் பழங்கள், கிழங்குகளை சாப்பிடுகிறேன். ரேஷன் பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்தால் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
