அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே கடந்த சில மாதங்களாக எல்லைப் பகுதியில் கடுமையான மோதல் நிலவி வருகிறது. இந்தச் சூழ்நிலையில், ஆப்கானிஸ்தானின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கோஸ்ட் , குனார் மற்றும் பக்திகா (Paktika) ஆகிய மூன்று மாகாணங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் திடீரென வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. பாகிஸ்தான் போர் விமானங்கள் நடத்திய இந்தத் தீவிர குண்டுவீச்சில், அப்பாவி பொதுமக்கள் வசிக்கும் வீடுகள் கடுமையாகச் சேதமடைந்தன.
இந்தக் கொடூரமான தாக்குதலில் 11 குழந்தைகள், ஒரு பெண் மற்றும் ஒரு முதியவர் உட்பட மொத்தம் 13 ஆப்கானியப் பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்று ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார். மேலும், இந்தச் சம்பவத்தில் 14 பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர். பாகிஸ்தான் தங்களது வான்வெளியை அத்துமீறி நுழைந்து, தூங்கிக் கொண்டிருந்த அப்பாவி பொதுமக்களின் வீடுகள் மீது குண்டுகளை வீசியுள்ளதாக ஆப்கானிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மறுபுறம், இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ள பாகிஸ்தான் அரசு, தாங்கள் பொதுமக்களைக் குறிவைக்கவில்லை என்றும், தங்களுக்கு எதிராகச் செயல்படும் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் மறைவிடங்களை மட்டுமே துல்லியமாகத் தாக்கி அழித்ததாகவும் கூறியுள்ளது. ஆப்கானிஸ்தான் மண் தங்களுக்கு எதிரான பயங்கரவாதச் செயல்களுக்குப் பயன்படுத்தப்படுவதாகப் பாகிஸ்தான் குற்றம் சாட்டும் நிலையில், ஆப்கானிஸ்தான் அதனை மறுத்துள்ளது. இந்த அடுத்தடுத்த வான்வழித் தாக்குதல்களால் இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லைப் பதற்றம் மீண்டும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
