2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக – காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்படுமா அல்லது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) காங்கிரஸ் கைகோர்க்குமா என்பது தற்போது தமிழக அரசியலில் பெரும் விவாதமாக உருவெடுத்துள்ளது. திமுக கூட்டணியில் தற்போது அங்கம் வகிக்கும் காங்கிரஸிற்கு, தவெக தரப்பிலிருந்து ஒரு கவர்ச்சிகரமான “ஆஃபர்” வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, தவெகவுடன் கூட்டணி அமைத்தால் காங்கிரஸிற்கு 100 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும், ஆட்சியில் பங்கும் துணை முதலமைச்சர் பதவியும் வழங்கப்படும் என்றும் கூறப்படுவது டெல்லி மேலிடத்தை யோசிக்க வைத்துள்ளது.
ராகுல் காந்தியைப் பொறுத்தவரை, திமுக கூட்டணியில் தொடர்வது பாதுகாப்பான மற்றும் வெற்றிக்கான வாய்ப்பாகத் தெரிந்தாலும், அங்கு அதிகாரப் பகிர்வு கிடைப்பதில்லை என்பது ஒரு குறையாகவே உள்ளது. அதே நேரத்தில், விஜய்யின் எழுச்சி மற்றும் அவருக்கு இருக்கும் இளைஞர் பட்டாளத்தின் ஆதரவு, காங்கிரஸிற்கு தமிழகத்தில் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க ஒரு வாய்ப்பாகத் தெரிகிறது. குறிப்பாக, ‘ஜனநாயகன்’ திரைப்பட விவகாரம் மற்றும் கரூர் சம்பவத்தால் விஜய் மீது ஏற்பட்டுள்ள அனுதாப அலை, விஜய்யின் பக்கம் காங்கிரஸ் சாய ஒரு காரணமாக அமையும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
காங்கிரஸின் இந்த இரட்டை நிலைப்பாட்டால் திமுக தலைமை கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஒருவேளை காங்கிரஸ் கூட்டணியிலிருந்து வெளியேறினால், அவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் திமுக நேரடியாகத் தனது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெற முடியும் என்று திமுக அமைச்சர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். ‘உதயசூரியன்’ நிழலில் காங்கிரஸ் நீடிக்குமா அல்லது விஜய்யின் ‘விசில்’ சத்தத்திற்குச் செவிசாய்த்துப் புதிய பாதையைத் தேர்ந்தெடுக்குமா என்பதே தமிழக அரசியலின் இப்போதைய மில்லியன் டாலர் கேள்வியாகும்.
