ஹார்முஸ் நீரிணை வழியாக அமெரிக்கப் படைகள் ஈரானுக்குத் தெரியாமல் ரகசியமாகச் சுமார் 100 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யைக் கடத்தியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடிக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக, கடந்த பிப்ரவரி 28 முதல் இந்த முக்கிய கடல் வழிப்பாதையை ஈரான் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு இந்த ஹார்முஸ் நீரிணை வழியாகவே கடந்து செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது ‘ட்ரூத் சோசியல்’ பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், கடந்த மாதம் அமெரிக்க ராணுவத்திற்கு எண்ணெய் டாங்கர்கள் மற்றும் பிற வணிகக் கப்பல்களுக்கு ஆதரவளிக்கும் ரகசியப் பணியைச் செய்ய உத்தரவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த முயற்சியின் விளைவாகவே, 100 மில்லியனுக்கும் அதிகமான பேரல் எண்ணெய் திறந்தவெளிச் சந்தைக்கு வந்து சேர்ந்துள்ளது என்றும், ஈரானின் ரேடார்களை அமெரிக்கா தவிடுபொடியாக்கியதால் விளக்குகள் எரியாத நிலையில் நள்ளிரவில் 22 கப்பல்கள் ஈரானுக்குத் தெரியாமல் கடந்து சென்றுள்ளதாகவும் அவர் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த மே மாத தொடக்கத்தில் ‘புராஜெக்ட் ஃப்ரீடம்’ என்ற பெயரில் கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் ராணுவ நடவடிக்கையை அமெரிக்கா தொடங்கியது, ஆனால் கூட்டணி நாடுகளின் ஆதரவு கிடைக்காததால் அது கைவிடப்பட்டது. தற்போது அமெரிக்கப் படைகள் ரகசியமாக மேற்கொண்ட இந்த ஆபரேஷன் மூலம் 200-க்கும் மேற்பட்ட வணிகக் கப்பல்கள் ஈரானின் கவனத்திற்கு வராமல் இந்த கடல் பாதையைக் கடந்துள்ளதாக டிரம்ப் விளக்கமளித்துள்ளார்.
