“தமிழ்நாட்டில் 1.79 கோடி முட்டாள்கள்”…. வாக்காளர்களை வெளுத்து வாங்கிய திமுக முன்னாள் அமைச்சர்… சர்ச்சை பேச்சு….!

By Nanthini on புரட்டாதி 6, 2026

Spread the love

தமிழகத்தில் நடைபெற்று வரும் தவெக ஆட்சியை அமைய காரணமான 1.79 கோடி வாக்காளர்களை ‘முட்டாள்கள்’ என திமுக முன்னாள் அமைச்சர் காந்தி கடுமையாக சாடியுள்ளார். காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் வீடுகளில் நடைபெற்ற ரெய்டு, சட்டமன்றத்தில் அவர் தொடர்ந்து கேள்வி கேட்பதை தடுப்பதற்கான அச்சுறுத்தலேயாகும். தற்போதைய ஆட்சியில் எந்த சாதனையும் இல்லாமல் ‘ரீல்ஸ்’ மட்டுமே ஓடிக்கொண்டிருக்கிறது. ராணிப்பேட்டையில் இல்லாத ‘ஜேகே டயர்’ நிறுவனத்தைப் பற்றி அமைச்சர்கள் பதிலளிப்பது இவர்களின் அறியாமையைக் காட்டுகிறது. மாநிலத்தில் 34 சதவீத மக்கள், அதாவது 1.79 கோடி பேர் வாக்களித்ததால்தான் இந்த அரசு அமைந்தது” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தவெக அரசு தனது தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல், முந்தைய திட்டங்களுக்குப் பெயர் மாற்றம் மட்டுமே செய்து வருவதாகக் குற்றம்சாட்டினார். “நாங்கள் போற்றும் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையிலான அன்றைய திமுக அரசு, கொரோனா போன்ற பேரிடர் காலங்களை மிகச் சிறப்பாகக் கையாண்டது. ஆனால், தற்போது இருக்கும் ரீல்ஸ் தளபதியின் ஆட்சியில் எந்தப் பயனும் இல்லை” என்று விமர்சித்தார். தவெக ஆட்சியின் செயல்பாடுகளையும், வாக்களித்த மக்களையும் ஒரே நேரத்தில் விமர்சித்து முன்னாள் அமைச்சர் காந்தி பேசியுள்ள இந்த விவகாரம், தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தையும் காரசாரமான விவாதங்களையும் கிளப்பியுள்ளது.