கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டத்தில், 1 வயது 7 மாதமே ஆன லதிகா என்ற பெண் குழந்தை, பள்ளி வாகனம் சக்கரத்தில் சிக்கிக் கொடூரமாகப் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மைசூருவில் உள்ள சாஸ்திரி பப்ளிக் பள்ளிக்குச் சொந்தமான வாகனத்தில் 4 வயது சிறுவன் ஒருவன் பள்ளி முடிந்து வீட்டிற்குத் திரும்பியுள்ளான். அவனை வாகனத்தில் இருந்து கீழே இறக்கிவிட அவனது தாய் வந்தபோது, எதிர்பாராதவிதமாக அருகே நின்றுகொண்டிருந்த 1 வயது பெண் குழந்தை லதிகாவின் மீது பள்ளி வாகனம் ஏறி இறங்கியுள்ளது. ஓட்டுநர் கவனக்குறைவாக வாகனத்தை முன்னோக்கி நகர்த்தியதால் இந்த விபரீதம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
வாகனத்தின் சக்கரத்தில் சிக்கிப் பலத்த காயமடைந்த குழந்தை லதிகா சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தாள். பெற்ற தாயின் கண்ணெதிரே நடந்த இந்த கொடூர சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து, பள்ளி வாகன ஓட்டுநரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
