பீகார் மாநிலம் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில், கள்ளக்காதல் விவகாரத்தால் இளைஞர் ஒருவர் கொடூரமான முறையில் சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மட்லோஹியர் கிராமத்தைச் சேர்ந்த அஜய் படேல் (25) என்பவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த திருமணமான பெண்ணான தபு என்பவருக்கும் இடையே தொடர்பு இருந்துள்ளது. இவர்களது தனிப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானதால் ஆத்திரமடைந்த பெண்ணின் கணவன் அஸ்லம், அஜயைக் கொல்லத் திட்டமிட்டுள்ளார். ஏற்கனவே கொலை வழக்குகளில் தொடர்புடைய அஸ்லமுக்கு பயந்து லூதியானாவுக்கு தப்பிச் சென்ற அஜய், சமீபத்தில் ஊர் திரும்பிய நிலையில் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.
கடந்த 8-ஆம் தேதி இரவு, அஜய்யின் காதலியே அவருக்கு ஆசை வார்த்தை கூறி போன் மூலம் வீட்டிற்கு வரவழைத்துள்ளார். அங்கு மறைந்திருந்த அஸ்லம் மற்றும் அவரது கூட்டாளிகள் அஜய்யை சுற்றி வளைத்துத் தாக்கியுள்ளனர். மனிதநேயமற்ற முறையில் அஜய்யின் கண்களைத் தோண்டி எடுத்ததுடன், கூர்மையான ஆயுதங்களால் அவரது மர்ம உறுப்பைச் சிதைத்து மிகக் கொடூரமான முறையில் சித்ரவதை செய்து கொலை செய்துள்ளனர். பின்னர், இந்தச் செயலைத் தற்கொலை என திசைதிருப்பும் நோக்கில், அஜய்யின் உடலைத் தூக்கில் தொங்கவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவம் குறித்துத் தகவலறிந்த காவல்துறையினர் மோப்ப நாயுடன் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அந்த மோப்ப நாய் நேராக குற்றவாளியின் வீட்டிற்குச் சென்று நின்றதால், தற்கொலை நாடகம் அம்பலமானது. இந்த வழக்கில் தொடர்புடைய காதலி தபுவை காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில், முக்கியக் குற்றவாளியான அஸ்லம் மற்றும் அவரது கூட்டாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கள்ளக்காதலால் அரங்கேறிய இந்த கொடூரக் கொலைச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
