ஷங்கர் படத்தில் எல்லா ஏரியாவுலயும் வேலை செஞ்சோம்.. ஆனா கிரெடிட் கொடுக்கல- எழுத்தாளர்கள் சுபா ஆதங்கம்!

By vinoth

Published on:

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் பல ஆண்டுகளாக சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார். ரஜினி எப்படி நடிகர்களில் சூப்பர் ஸ்டாராக விளங்குகிறாரோ அதுபோலவே இயக்குனர்களில் சூப்பர் ஸ்டாராக ஷங்கர் இருந்து வருகிறார். 1993 ஆம் ஆண்டு ஜெண்டில்மேன் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஷங்கர் அதன் பின்னர் இந்தியன், முதல்வன், அந்நியன், சிவாஜி என பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்தார்.

ஷங்கரின் அனைத்துப் படங்களிலும் அவரது திரைக்கதை வெகுஜனத்துக்கு ஏற்றவாறும், வசனங்கள் நறுக்குத் தெரித்தார்போலவும் இருக்கும். இதற்காக அவர் பாலகுமாரன், சுஜாதா மற்றும் சுபா போன்ற எழுத்தாளர்களைப் பயன்படுத்திக் கொள்வார்.

   

ஷங்கரின் இந்த வெற்றிக்கு அவரோடு பல படங்களில் பயணித்த சுஜாதாவின் பங்களிப்பு மிக முக்கியக் காரணம் என சொல்லலாம். சுஜாதாவின் மறைவுக்குப் பிறகு அவர் உருவாக்கிய படங்களில் சுஜாதாவின் இன்மை வெளிப்படையாக தெரிந்தது.

அதன் பின்னர் அவர் பல எழுத்தாளர்களை தன் படத்தில் பயன்படுத்தி வருகிறார். அப்படி அவர் தன்னுடைய ஐ படத்தில் எழுத்தாளர்கள் சுபாவை பயன்படுத்தினார். ஆனால் அந்த படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை. இந்நிலையில் இந்த படத்தில் பணிபுரிந்த அனுபவத்தை சுபா ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளனர்.

இதுபற்றி “ஐ படத்தில் நாங்கள் வசனத்தில் மட்டும் வேலை செய்யவில்லை. கதையிலேயே பெரியளவில் வேலை செய்தோம். அந்த ஐ வைரஸ் ஐடியாவெல்லாம் நாங்கள் சொன்னதுதான். திரைக்கதை அமைப்பிலேயே எங்கள் பங்களிப்பு இருந்தது. ஆனால் வசனம் என்று மட்டும்தான் கிரெடிட்ஸ் வந்தது. இதுபற்றி நாங்கள் கேட்டபோது ‘நாங்கள் வசனம் என்று மட்டும்தான் போடுவோம். சுஜாதாவுக்கே அப்படிதான் போட்டுள்ளோம்’ என ஷங்கரின் உதவி இயக்குனர்கள் கூறினர்.” எனத் தெரிவித்துள்ளனர்.