தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, 234 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அதிரடி காட்டியுள்ளார். இதில் ஒரு திருப்பமாக, தவெக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். அதிமுக மற்றும் திமுக போன்ற பிரதான கட்சிகளிலிருந்து விலகி வந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், புஸ்சி ஆனந்த் திநகரிலும், ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கத்திலும், அதிமுகவிலிருந்து வந்த செங்கோட்டையன், சத்யபாமா, ஜேசிடி பிரபாகர் உள்ளிட்ட பலருக்கும் சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த வேட்பாளர் பட்டியலில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது விஜய்யின் கல்லூரி கால நண்பரும் நடிகருமான ஸ்ரீநாத்தின் பெயர் தான். விஜய்யுடன் ‘நாளைய தீர்ப்பு’ படம் தொடங்கி ‘வேட்டைக்காரன்’, ‘மாஸ்டர்’ எனத் திரைத்துறையிலும் சரி, தனிப்பட்ட வாழ்விலும் சரி நீண்ட கால நட்பைப் பேணி வருபவர் ஸ்ரீநாத். நடிகர் மட்டுமல்லாது சந்தானம் நடித்த ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய அனுபவமும் இவருக்கு உண்டு. தற்போது தனது ஆருயிர் நண்பனுக்காக விஜய் தூத்துக்குடி தொகுதியை ஒதுக்கியுள்ளார்.
அதேவேளையில், இந்த வேட்பாளர் அறிவிப்பு கட்சியில் சில சலசலப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காத நிலையில், விஜய்யின் காரை வழிமறித்து தனது கோரிக்கையை முன்வைத்த அஜிதாவுக்கு இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. தூத்துக்குடி தொகுதியில் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என அவர் பெரிதும் எதிர்பார்த்திருந்த நிலையில், அங்கு ஸ்ரீநாத் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளது அஜிதா மற்றும் அவரது ஆதரவாளர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தைப் பொறுத்தவரை சிந்தாமணி, பல்லவி, சத்யபாமா போன்றோருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டிருந்தாலும், மொத்த வேட்பாளர் எண்ணிக்கையில் பெண்களுக்கான விகிதம் குறைவாகவே இருப்பதாகக் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஏற்கனவே கட்சியில் பழைய நிர்வாகிகளை விட புதிதாக இணைந்தவர்களுக்கே பதவிகள் வழங்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் நிலவி வரும் சூழலில், விஜய்யின் இந்த முதல் தேர்தல் வேட்பாளர் பட்டியல் அரசியலில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
