அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானுக்கு எதிரான தனது மூலோபாய இலக்குகள் இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதேவேளையில், ஒரு பெரிய அளவிலான ராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்கா ஆயத்தமாகி வரும் சூழலில், அதன் ராணுவத் தயார்நிலை குறித்தும் ஆயுதக் கையிருப்பு குறித்தும் புதிய சந்தேகங்கள் எழுந்துள்ளன. நீண்டகாலப் போர் ஒன்று வெடிக்கும் பட்சத்தில், ஏவுகணைகள் மற்றும் வெடிமருந்துகளின் தட்டுப்பாடு அமெரிக்காவிற்கு ஒரு மிகப்பெரிய சவாலாக உருவெடுக்கக்கூடும் என சர்வதேச ஊடகச் செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன.
‘தி வாஷிங்டன் போஸ்ட்’ மற்றும் ‘தி டெலிகிராஃப்’ ஆகிய முன்னணி நாளிதழ்களின் அறிக்கைகளின்படி, தற்போதைய ஆயுதக் கையிருப்பைக் கொண்டு நீண்டகால ராணுவ நடவடிக்க பாதுகாப்பாகத் தொடர்வது கடினம் என மூத்த அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். குறிப்பாக, வான் பாதுகாப்பு இடைமறிப்பு ஏவுகணைகள் மற்றும் நீண்ட தூரத் துல்லிய தாக்குதல் ஆயுதங்களின் கையிருப்பு வேகமாகச் சரிந்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிடியூட் வெளியிட்ட அறிக்கையின்படி, போரின் தொடக்கக் கட்டத்திலேயே ‘THAAD’, ‘பேட்ரியாட் PAC-3’ மற்றும் ‘டோமாஹாக்’ போன்ற ஆயிரக்கணக்கான நவீன ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதால், நாட்டின் முக்கிய ஏவுகணைக் கிடங்குகள் சில வாரங்களில் காலியாகும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், வளைகுடாப் பகுதிகளில் தரைப்படைகளை நிலைநிறுத்துவது அமெரிக்காவிற்கு ஒரு பெரும் மூலோபாயத் தவறாக அமையக்கூடும் என்று ‘மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையத்தின்’ பாதுகாப்பு நிபுணர் சேத் ஜோன்ஸ் கவலை தெரிவித்துள்ளார். மோதல் தீவிரமடைந்தால், கூடுதல் துருப்புகளையும் போர் விமானங்களையும் விரைவாக நிலைநிறுத்துவதில் அமெரிக்க ராணுவம் நடைமுறைச் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆயினும், ஈரானுக்கு எதிராகத் தரைப்படையை அனுப்பும் சாத்தியக்கூறை அதிபர் ட்ரம்ப் முழுமையாக மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இந்த எச்சரிக்கைகளையும் குற்றச்சாட்டுகளையும் வெள்ளை மாளிகை முற்றிலுமாக மறுத்து நிராகரித்துள்ளது. அதிபர் டொனால்ட் ட்ரம்பின் அனைத்து மூலோபாய இலக்குகளையும் வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கும், அதற்கும் மேலான ராணுவ நடவடிக்கைகளுக்கும் தேவையான அளப்பரிய ஆயுதங்களும் வெடிமருந்துகளும் அமெரிக்க படைகளிடம் போதுமான அளவில் உள்ளதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் அன்னா கெல்லி உறுதிபடத் தெரிவித்துள்ளார். ஆயுதப் பற்றாக்குறை குறித்த செய்திகள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வந்த தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது மாணவி திடீரென மாயமான சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே…
குழந்தைகளைக் கண்காணிக்கத் தவறிவிட்டு, அனைத்துத் தவறுக்கும் மற்றவர்கள் மீது பழிபோடும் தற்காலப் பெற்றோரின் பொறுப்பற்ற போக்கு குறித்து சமூக வலைதளங்களில்…
ஏர் இந்தியா விமானத்தில் 6 அடி 8 அங்குல உயரம் கொண்ட நபர் கழிவறையைப் பயன்படுத்தும் போது படும் சிரமங்களை…
வயது வெறும் எண் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில், 78 வயதான பிரபல மூத்த பாடகி உஷா…
மும்பை வீதிகளில் மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு, எவ்விதச் சோர்வுமின்றி உற்சாகமாகச் சொமேட்டோ உணவு விநியோகம் செய்துவரும் மாற்றுத்திறனாளி…
உத்தரப் பிரதேசத்தில் ஆசிரியர் வேலை கிடைக்காததால் ராபிடோ ஆட்டோ ஓட்டிக்கொண்டே போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் இளைஞரின் வீடியோ சமூக…