‘புத்தம் புது காலை.. பொன்னிற வேளை’…. ஒரு பாட்டுக்குப் பின்னாடி இவ்ளோ கதை இருக்கா?

By vinoth

Published on:

தமிழ் சினிமாவின் பெருமைமிகு அடையாளங்களில் ஒருவராக இருப்பவர் இளையராஜா. இதுவரை 1500 படங்களுக்கு மேல் இசையமைத்து உலகிலேயே எந்தவொரு இசையமைப்பாளரும் படைக்காத சாதனையை நிகழ்த்தியுள்ளார். இப்போது 82 வயதாகும் நிலையிலும் வெற்றிமாறன் மற்றும் தியாகராஜன் குமாரராஜா உள்ளிட்ட முன்னணி இயக்குனர்களின் படங்களுக்கு அவர் இசையமைத்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான் இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கும் இளையராஜாவுக்கும் இடையே உள்ள பெரிய வித்தியாசமே பின்னணி இசையில் இளையராஜாவுக்கு நிகர் அவர் மட்டுமே. அவரின் வருகைக்குப் பிறகே தமிழ் சினிமாவில் பின்னணி இசையை இயக்குனர்கள் உணர ஆரம்பித்தார்கள் என்றால் அது மிகையாகாது.

   

இளையராஜா எத்தனையோ இயக்குனர்களோடு இணைந்து பணியாற்றி இருந்தாலும் பாரதிராஜா, பாலு மகேந்திரா, மகேந்திரன் மற்றும் மணிரத்னம் ஆகியோரோடு இணைந்து அவர் கொடுத்த பாடல்கள் இன்றளவும் பசுமையான பாடல்களாக நினைவில் தங்கியுள்ளன. அதிலும் தன் நெருங்கிய நண்பரான பாரதிராஜாவின் படங்களுக்கு கொடுத்த ஒவ்வொரு பாடலுமே ஹிட்தான்.

அப்படிதான் அவர் அலைகள் ஓய்வதில்லை படத்துக்காக கொடுத்த பாடல் ‘புத்தம் புது காலை’ என்ற பாடல். ஆனால் இந்த பாடலை படத்துக்குள் சரியான இடத்தில் பொருத்த முடியாததால் படத்தில் இருந்து நீக்கியுள்ளனர். ஆனாலும் இந்த பாடல் சில இசைத் தட்டுகளில் இடம்பெற்று எப்படியோ ரசிகர்களிடம் சார்ட்பஸ்டர் ஹிட்டானது. அதன் பின்னர் மேகா என்ற படத்தில் இந்த பாடலை பயன்படுத்தினர்.

இந்நிலையில் இந்த பாடல் பற்றி பலரும் அறியாத ஒரு தகவலை இயக்குனர் ஜான் மகேந்திரன் பகிர்ந்துள்ளார். அதன்படி இந்த பாடல் இளையராஜா தயாரிப்பில் தன்னுடைய தந்தை மகேந்திரன் இயக்க இருந்த மருதாணி என்ற படத்துக்காக போடப்பட்டதாம். ஆனால் சில காரணங்களால் அந்த படம் கைவிடப்பட்ட நிலையில் அந்த பாடலை அலைகள் ஓய்வதில்லை படத்துக்குக் கொடுத்துள்ளார் இசைஞானி. ஆனால் அப்படியும் அந்த பாடல் அந்த படத்தில் இடம்பெற முடியவில்லை என்பதுதான் சோகம்.