கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அப்துல் அதே பகுதியில் ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் கடை நடத்தி வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த அலாவுதீனின் மனைவிக்கும் அப்துலுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.
இதை அறிந்த அலாவுதீன் அப்துல்லை கண்டித்துள்ளார். இருப்பினும் இருவரும் தொடர்ந்து பழகி வந்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்த அலாவுதீன் குடும்பத்தை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் அலாவுதீனின் தம்பி ஆரிஸ், அவரது நண்பர் கௌதம் ஆகியோர் நேற்று அப்துலின் கடைக்கு சென்று “எனது அண்ணியும் நீயும் பழகியதால் தான் என் அண்ணன் காணாமல் போய்விட்டார்” என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் கோபத்தில் ஆரிஸ் அப்துலின் கையில் கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதனால் காயமடைந்த அப்துல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆரிஸ், கௌதம் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
