டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்ற பல கோடி ரூபாய் நிதி முறைகேடு மற்றும் சட்டவிரோதப் பணவசூல் தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத்துறை புதிய முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளது. இதில் திமுக முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், டாஸ்மாக் முன்னாள் மேலாண் இயக்குநர் ஐ.ஏ.எஸ் அதிகாரி எஸ். விசாகன், மண்டல மேலாளர்கள் மற்றும் செந்தில் பாலாஜியின் உதவியாளர்கள் உட்பட மொத்தம் 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்புதிய வழக்கின் கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க வி. செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முன்ஜாமீன் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த ஊழல் வழக்கு தொடர்பாகத் தமிழ்நாடு முழுவதும் செந்தில் பாலாஜி மற்றும் அவரது ஆதரவாளர்களுக்குச் சொந்தமான இடங்கள், டாஸ்மாக் அலுவலகங்கள் மற்றும் மதுபான உற்பத்தி ஆலைகள் என 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஒரே நேரத்தில் அதிரடிச் சோதனைகளை மேற்கொண்டனர். இச்சோதனையில் முறைகேடுகள் தொடர்பான பல்வேறு முக்கிய ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. தனியார் பார்கள், மதுபான உற்பத்தி ஆலைகள் மற்றும் போக்குவரத்து ஒப்பந்தக்காரர்களுடன் கூட்டுச் சேர்ந்து டெண்டர் நடைமுறைகளில் பெருமளவில் முறைகேடு செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக கோவை, ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர் மற்றும் நீலகிரி ஆகிய மேற்கு மாவட்டங்களில் இந்த முறைகேடுகள் தீவிரமாக நடைபெற்றுள்ளதாகப் புலனாய்வு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
2021 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் டாஸ்மாக் நிர்வாகத்தில் மாபெரும் நிதி முறைகேடுகள் நடந்துள்ளதை லஞ்ச ஒழிப்புத்துறை புள்ளிவிவரங்களுடன் வெளியிட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையின்படி, கோவை வடக்கில் ரூ.17.27 கோடியும், கோவை தெற்கில் ரூ.13.58 கோடியும், நீலகிரி மண்டலத்தில் ரூ.1.95 கோடியும் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமன்றி, மதுப்பிரியர்களிடம் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விலையை விட சாதாரண மதுபானங்களுக்கு ரூ.10 முதல் ரூ.100 வரையிலும், வெளிநாட்டு மதுபானங்களுக்கு பாட்டிலுக்கு ரூ.500 வரை சட்டவிரோதமாகக் கூடுதல் பணம் வசூலிக்கப்பட்ட அதிர்ச்சித் தகவலும் எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுப் பின்னர் பிணையில் வெளிவந்துள்ள செந்தில் பாலாஜிக்கு, இந்த புதிய எஃப்.ஐ.ஆர் மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது. அமைச்சர் பதவியிலிருந்து விலகிய பின்னரும், டாஸ்மாக் நிறுவனத்தின் ஒப்பந்தங்கள் மற்றும் செயல்பாடுகளில் அவர் தனது செல்வாக்கை மறைமுகமாகப் பயன்படுத்தியதாகப் புலனாய்வு அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…