நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கக் கோரி படக்குழுவினர் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. முன்னதாக, இப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க சென்னை உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால், இதனை எதிர்த்து மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் (CBFC) தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது. இந்தத் தடையை நீக்கக் கோரியே படக்குழு உச்ச நீதிமன்றத்தை அணுகியது.
வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையை நீக்க மறுத்துவிட்டது. தணிக்கை வாரியத்தின் வாதங்களைக் கருத்தில் கொண்ட நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கில் தற்போது தலையிட முடியாது என்று தெரிவித்து, படக்குழுவின் கோரிக்கையை நிராகரித்தது. விஜய்யின் அரசியல் வருகைக்கு முன்பாக வெளியாகும் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ‘ஜனநாயகன்’, இந்த சட்ட சிக்கல்களால் பொங்கல் வெளியீட்டில் இருந்து தள்ளிப்போயுள்ளது குறிப்பிடத்தக்கது.
